எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் வடிவில் வடக்கில் உளவு பார்ப்பதற்காக இந்திய இராணுவத்தினர் மற்றும் முகவர்கள் ஊடுருவுவதாக இரகசிய தகவல்கள் உளவுப் பிரிவுக்கு கிடைத்துள்ளன.
இது தொடர்பில் உளவுப் பிரிவு தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாக பாதுகாப்பு தரப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அண்மையில் நெடுந்தீவு கடற்பகுதி ஊடாக இவ்வாறு இந்திய இராணுவ வீரர் ஒருவர் இலங்கை எல்லைக்குள் ஊடுருவ முற்படும் போது ரோந்து சென்ற கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் பின்னர் உயர் மட்ட ஆலோசனைகளின் பேரில் அவர் கடலில் வைத்தே இந்திய அதிகாரிகளிடம் இரகசியமாக கையளிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் உள்ளக தகவல்கள் உறுதிப்படுத்தின.
கடந்த மூன்றாம் திகதி இரு படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் ரோந்தில் இருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது ஒரு படகில் இருந்த ஐவரில் ஒருவர் இந்திய இராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்த கடற்படை அதிகாரிகளுக்கு உயர் மட்டத்தில் இருந்து கிடைத்துள்ள ஆலோசனைக்கு அமைவாக, அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களுடன் இருந்த இந்திய வீரரை மட்டும் இந்திய எல்லைக்கு கொண்டு போய் அந் நாட்டு கரையோர பாதுகப்பு படையினரிடம் கையளித்துள்ள கடற்படையினர் மிகுதியான மீனவர்களை கரைக்கு அழைத்து வந்து விசாரணை அதிகாரிகளிடம் கையளித்துள்ளதாக கடற்படையின் உள்ளக தகவல்கள் உறுதிப்படுத்தின.
இந் நிலையிலேயே இந்திய இராணுவ வீரர்கள் உளவு பார்க்க இலங்கைக்குள் ஊடுருவுகின்றனரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
இது குறித்து உளவுப் பிரிவினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
ஏற்கனவே இந்தியாவில் இருந்து புடவை வியாபாரிகளாகவும், மீனவர்களாகவும் உளவு பார்க்கும் முகவர்கள் வருவதாக சந்தேகங்கள் இருந்த நிலையில் தற்போது இச்சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.