
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுமையாக இருக்க வேண்டும் என்பது குறித்தும், சமகால அரசியல் நிலை குறித்தும் நேற்றைய சந்திப்பின் போது பேசப்பட்டதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளெட்) அமைப்பின் தலைவர் த.சித்தார்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியை தவிர்த்து, ஏனைய பங்காளிக் கட்சிகள் இரகசிய சந்திப்பொன்றை நேற்று இரவு நடத்தியிருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அவர், “மாவட்ட ரீதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுமையாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் இதன் போது பேசப்பட்டுள்ளது.
அத்துடன், சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. அண்மை காலமாக கூட்டமைப்பில் உள்ள ஏனைய பங்காளி கட்சிகளுடன் தமிழரசு கட்சி சுமூகமான உறவை பேண மறுத்து வருகின்றது.
அதனுடைய ஒரு வெளிப்பாடாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில் இந்த சந்திபின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சி எங்களை தனித்து விட்டு பயணிக்கின்றது. இந்நிலையில் எங்களை வலுப்படுத்திக்கொள்வதன் மூலம் தமிழரசு கட்சி இயல்பாகவே எங்களுடன் சேர்ந்து செயற்படும்.
எவ்வாறாயினும், இவ்வாறான கூட்டங்கள் ஏனைய மாவட்டங்களிலும் நடத்தப்படும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளெட்) அமைப்பின் தலைவர் த.சித்தார்தன் மேலும் தெரிவித்தார்.