கிளிநொச்சியில் இன்றைய தினம் (16.10.2018) வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் உலக வெண் பிரம்பு பாதுகாப்பு நாள் தின நிகழ்வு இடம்பெற்றது. இதில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அங்கு உரையாற்றுகையில், 1996 தொடக்கம் 2002 காலப்பகுதியில் வன்னியில் மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய பொழுது இங்குள்ள பலரை நான் சந்தித்திருந்தேன். மீண்டும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உங்களை சந்திப்பதில் மகிழ்வு அடைகின்றேன்.
பலவிதமான இடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உங்களுடைய உரிமைக்காக குரல் கொடுக்கின்றீர்கள் என்றால் அது நிச்சயமாக தேவையான ஒன்று. ஒவ்வொரு உரிமைகளும் வெறும் சட்டங்களாக அல்ல. மனிதர்கள் மனிதாபிமானத்துடன் இருந்தால் கூட அது நிச்சயமாக பாரிய வெற்றியினை கொடுக்கும்.
வெண்பிரம்புடன் ஒருவர் வரும்போது அவருக்கு எவ்வாறு நாம் உதவவேண்டும் என்ற எண்ணம் சமுதாயத்தில் வளர்க்கப்படவேண்டும்.
இங்கு உள்ள தோழர் ஒருவர் வரலாற்றில் எவ்வளவொ அறிந்து வைத்துக்கொண்டு உரையாற்றினார். தொடர்ந்தும் அவர், 1948ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கையினை சுதந்திரம் அடைய வைக்க தமிழரும், சிங்களவரும் இணைந்தே போராடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் விடுதலை கிடைக்கும் பொழுது நயவஞ்சகத்தனமாக தமிழனுக்கு என தனி இராச்சியத்தினை அவன் பிரித்துக் கொடுக்கவில்லை. ஆனால் அதற்;கு முன் தமிழ் இராச்சியம், சிங்கள இராச்சியம் என பிரித்தே ஆட்சி நடைபெற்றது. தமிழரும், சிங்களவரும் இணைந்தே வாழ வேண்டும் என்று அன்று கூறிய இந்த இனம் இன்று எமது உரிமைகளை நாம் பெற்று வாழ எமக்கு இடையூறாக இருக்கிறது என்பது தான் உண்மை. இதை அரசியலுக்காகக் கூறவில்லை. இங்கு உள்ள அந்த விழிப்புணர்வு சக தோழர் நேரடியாக இதனைத் தெரிவித்திருந்தார்.
இந்த விடயத்தினை அவர் உறுதியாகச் சுட்டிக்காட்டினார். அந்த அளவிற்கு நாட்டின் பிரச்சினைகளை நீங்கள் அறிந்து வைத்திருக்கின்றீர்கள் என்றால் அது உண்மையில் மெச்சத்தக்கது.
உங்களின் உரிமைகளுக்காக நான் குரல்கொடுப்பேன் என்பதனைக் கூறிக்கொண்டு இந்த சமுதாயத்திடம் வேண்டுகோளாக கேட்டுகொள்வது என்னவெனில், எம்மத்தியில் வெண்பிரம்புடன் வரும் உறவுகளை நேசிக்கவேண்டும். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும். அலுவலகங்களில் வேலைகளுக்கு அவர்கள் அமர்த்தப்படும் பொழுது அவர்களின் உழைப்பிற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்களிடம் உள்ள நேர்மைக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும்.
விழிப்பார்வையற்ற ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தோழர் ஒருவர் தெரிவித்தார். உண்மையில் இது கவலைக்குரிய விடயம். அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதால் தான் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றது.
ஆனால் உங்களது தன் நம்பிக்கையையும், உங்களிடம் உள்ள எதற்குமே அச்சமின்றி கருத்துக்களைக் கூறுகின்ற பண்பையும் நான் ஊர்வலத்தின் போது கண்டேன். உங்களின் உரிமைகளை நீங்கள் வெல்வீர்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் பெரும் திரளாக மக்கள் கலந்துகொண்டதுடன் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.