தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதில் சர்வகட்சிகள் ஈடுபாடு- நம்பிக்கை அளிப்பதாக கூறுகிறார் சம்பந்தன்

227
தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் விதமாக நடைபெறும் கலந்துரையாடலில் சர்வகட்சிகள் கலந்து கொண்டது நம்பிக்கை தரும் வகையில் உள்ளதாக எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உண்மையை கண்டறிதல் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குதல் போன்றவற்றை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தமிழர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள், செய்து கொண்ட ஒப்பந்தங்கள் வெற்றியளிக்காத நிலையிலேயே இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை நாட நேரிட்டதாக கூறினார்.
பண்டா – செல்வா ஒப்பந்தம் மற்றும் பண்டா – டட்லி ஒப்பந்தம் என்பன உள்நாட்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமே தவிர அவை வெளிநாட்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அல்ல என்றும் சம்பந்தன் நினைவுபடுத்தினார்.
ஆனாலும் உள்நாட்டில் தமது பிரச்சினையை தீர்க்க ஆட்சியாளர்கள் தவறியமையினாலேயே தாம் வெளிநாட்டை நாட நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வொன்றை எதிர்பார்பதாக தெரிவித்த அவர் தமிழர்களுக்கு நாட்டில் சம உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த காலத்தில் உள்ளக விசாரணையை அரசு நிராகரித்தாகவும் தற்போதைய அரசின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட ஐ.நா தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டியது அதன் கடமை என்றும் கூட்டிக்காட்டினார்.
முழு அளவிலான சர்வதேச விசாரணை ஒன்றுக்கு நாட்டில் ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்த இன்னொரு தரப்பு உள்ளக விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று தெரிவித்த சம்பந்தன் எவருக்கும் பாதிப்பு வராத வகையில் ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று மேலும் கூறினார்.
SHARE