இலங்கையில் முன்பள்ளிக் கற்கைக்கான திட்டமிடல்கள் இல்லை. தீவகப் பகுதியில் ஆசிரியர் அதிபர் நியமனங்களில் சரியான திட்டமிடல்கள் இல்லை.
கணணித்துறை பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஏன் இராணுவத்தினர் முன்பள்ளிகள் நடாத்துகின்றனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவுசெலவு திட்ட விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,
தற்போதைய நிலையில் ஆசிரியர்களை விட மாணவர்களுக்கு கணனி அறிவு அதிகமாக உள்ளது. ஆசிரியர்களில் பலருக்கு கணனி அறிவு மிகவும் குறைவாகவே உள்ளது.
ஆகையால் ஆசிரியர்களுக்கு கணனி வழங்கப்பட்டு அவர்களின் கணனி அறிவு விருத்திக்காக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாகவே மாணவர்களுக்கு ஆசிரியர்களிடமிருந்து சிறந்த கல்வி சேவையை வழங்க முடியும்.
பலாலியிலுள்ள ஆசிரியர் பயிற்சிசாலை இன்னமும் மூடப்பட்டே இருக்கிறது. இவ்வாறான நிலையில் எவ்வாறு ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்க முடியும். முதலில் இந்த பயிற்சிசாலை மீண்டும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாம் இவ்வாறான விடயங்களை சபைகளில் பேசுகின்ற போதிலும் கூட அவை வெறும் பேச்சுகளாகவே அமைகின்றன. அவற்றுக்கான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இதேபோன்று பாடசாலைகளில் சைவ சமயத்தை தவிர்ந்த மற்ற மதங்களை போதிக்கின்ற ஆசிரியர்கள் பயிற்றப்பட்டவர்களாகவும், தேர்ச்சிப்பெற்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.
ஆனால் சைவ சமயத்தை போதிப்பதற்காக, வேறு பாடங்களில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களையும், கற்பிப்பதற்குரிய பாடம் இன்றிய நிலையில் இருப்பவர்களையும் சைவ சமயத்தை கற்பிக்கும் ஆசிரியர்களாக அமர்த்துகின்றார்கள்.
அத்துடன் வயதான ஆசிரியர்கள் என்றால் உடனடியாக சைவ சமயத்தை கற்பிப்பதற்காக நியமிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாறி சைவ பாடத்தில் பயிற்றப்பட்டவர்கள் மற்றும் தேர்ச்சிபெற்றவர்கள் மாத்திரமே சைவசமயத்தை கற்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
இதனைவிடவும் ஒரு முக்கியமான விடயம், நிதி ஒதுக்குவதால் மட்டுமே நாட்டின் கல்வி நிலையை உயர்த்த முடியாது.
மாறாக மாணவர்களுக்கு தேவையான விடயங்களையும் சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களையும் வழங்குவதன் மூலமே நாட்டின் கல்வி நிலையை வலுப்பெறச் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தீவக பகுதி பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு அவர்களது சொந்த இடங்களிலேயே அவர்களின் கல்விநடவடிக்கைகளை தொடரவும், பரீட்சைகளை எழுதுவதற்கும் வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், முன்பள்ளி குழந்தைகளுக்கு கல்வி தொடர்பில் நல்ல அபிப்பிராயங்களை கொண்டுவரக்கூடிய சிறந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீதரன் இதன்போது வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.