தமிழீழ வைப்பகத்தின் தங்க நகைகளை மீட்கும் நடவடிக்கை மீன்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தங்க நகைகளை மீட்கும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழீழ வைப்பகத்தின் தலைமைச் செயலகம், கேப்பாபுலவு வீதி, லூர்த்து மாதா சந்தியில் உள்ள இரண்டாம் காணியில் 2009 ஆம் ஆண்டு வரை செயற்பட்டு வந்தது.
குறித்த இடம் இராணுவக் கட்டுப்பட்டிற்குள் வரும் முன்னர் வைப்பகத்தின் தலைமைச் செயலகத்திற்கு முன்னால் காணப்பட்ட தனியார் ஒருவரின் வெற்றுக் காணியில் இருந்த ஆழமான மண் கிணற்றுக்குள் மக்கள் அடகுவைத்த தங்க நகைகளை போட்டு கிணற்றை தூற்றியுள்ளனர்.
இந்நிலையில் தமிழீழ வைப்பகத்துடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த தகவலை வழங்கியுள்ளார்.
இதனையடுத்தே முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் நேற்று இடம்பெற்றது.
எனினும் நேற்றையதினமும் எந்தவொரு தங்க நகைகளும் கிடைக்கப்பெறவில்லை.
குறித்த கிணறு 65 அடி ஆழம் என உரிமையாளர்களால் தெரிவிக்கப்படும் நிலையில் கடந்த வாரம் 23 அடியுடன் நிறுத்தப்பட்ட பணிகள் நேற்றையதினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதும் குறித்த ஆழம் வரை செல்லவில்லை.
இதனால் இன்று புதன்கிழமையும் மீட்பு பணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.