தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பெற்ற பதவியை வைத்துக் கொண்டு அதற்கெதிராகப் பேசுவதென்பது யோக்கியமான அரசியல் அல்ல…- கி.துரைராசசிங்கம்

184

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பெற்ற பதவியை வைத்துக் கொண்டு அதற்கெதிராகப் பேசுவதென்பது ஒரு யோக்கியமான அரசியல் அல்ல. கொள்கையை வழிநடத்துகின்றவர்கள் பிழையாக வழிநடத்துகின்றார்கள் என்று விமர்சிப்பவர்களின் மனச்சாட்சிக்குப் பட்டால் எந்தக் கொள்கையில் அடிப்படையில் நீங்கள் பதவிகளைப் பெற்றீர்களோ அந்தப் பதவிகளைத் துறந்துவிட்டு வெளியில் சென்று விமர்சிப்பதே சிறந்தது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற முன்னாள் விவசாய அமைச்சரின் கடந்த வருட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குமாரவேலியார் கிராம மீன்பிடிச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட கதிரைகளைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது கிழக்கு மாகாணசபை தொடர்பாக பல்வேறு விதத்தில் பேசப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணசபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வர வேண்டும் என்றால் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்று சொல்கின்றார்கள். அதில் நியாயம் இருக்கின்றது. ஆனால் தமிழர்கள் மட்டும் ஒற்றுமைப்பட்டு ஒன்றாகச் சேர்ந்து முதலமைச்சர் வர முடியுமா என்றால் அது முடியாது.

ஏனெனில் 37 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாகாணசபையில் நாங்கள் ஒரு முதலமைச்சரை உருவாக்க வேண்டும் என்றால் 19 உறுப்பினர்கள் தேவை. ஆனால் 19 தமிழ் உறுப்பினர்களை நாங்கள் கிழக்கில் ஒரு போதும் தெரிவு செய்ய முடியாது. ஆகக் கூடுதலாக வாக்கெடுப்பு மூலம் 12 அல்லது 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய முடியும் போனஸ் இரண்டு கிடைத்தால் ஆக உச்சமாக 15 பேருக்கு மேல் தமிழ் உறுப்பினர்களைப் பெற முடியாது. மிகுதி 05 பேர் தேவை, அதை எவ்வாறு பெற்றுக் கொள்வது யாரிடம் கேட்பது. சிங்கள உறுப்பினர்களிடம் கேட்போமாக இருந்தால் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தந்து எங்களை முதலமைச்சராக்குவதற்கு ஒருபோதும் தயாராக இல்லை. இம்முறை ஆட்சி மாற்றத்தின் போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தயாகமகே அவர்கள் தன்னை முதலமைச்சராக்குமாறே கோரினார்.

கிழக்கு மாகாணத்தைப் பொருத்தமட்டில் தமிழ் பேசும் ஒருவர் தான் முதலமைச்சராக வர வேண்டும். இங்கு தமிழர்களும் முஸ்லீம்களும் கிட்டதட்ட சமமான வீதத்திற்கு வந்துள்ளோம். இன்னும் நாங்கள் கவனமாக இல்லாது விட்டால் இன்னும் குறைந்து போகக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. அவ்வாறாயின் ஒரு தமிழர் அல்லது முஸ்லீம் தான் முதலமைச்சராக வர வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலே ஒரு முதலமைச்சர் வருவதென்றால் அவர் தமிழ் சிங்கள, முஸ்லீம் ஒற்றுமையின் மூலம் தான் வர முடியும். ஏதோவொரு இணக்கப்பாட்டின் மூலம் தான் வர முடியும். ஆனால் நாங்கள் புத்திசாலித்தனமாக இருந்தால் எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் அதிகரிக்கலாம். அந்த நேரத்தில் நாங்கள் இராஜதந்திரமாக நடந்து பேரம் பேசுதல் போன்ற நிகழ்ச்சி நிரலுக்குச் செல்லலாம்.

SHARE