தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் பாராளுமன்றில் நேற்றையதினம் ஆற்றிய உரை

124

‘இன்றைக்கு நாங்கள் ஒரு பேச்சுவார்த்தையிலே ஈடுபட ஆரம்பித்திருக்கிறோம். ஜனாதிபதி அவர்கள் நவம்பர் மாதம் வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாத முதலாம் நாள் நான் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்த விடயத்தைப்பற்றி எழுந்து பேசி மற்ற கட்சித் தலைவர்களோடு கலந்தாலோசித்து, வரவு செலவு திட்ட விவாதம் முடிவடைந்தவுடனேயே நாங்கள் சந்திக்கலாம் என்று சொல்லி சர்வ கட்சி மாநாடொன்றை டிசம்பர் 13ம் திகதி ஆரம்பித்து வைத்தார். அதிலே பலரும் இதனைத் தீர்க்கவேண்டும், தமிழ் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வரவேண்டும், உடனடி பிரச்சினைகளுக்கு தீர்வு வரவேண்டும் என பல முற்போக்கான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். அதிலே குறிப்பாக நீதி அமைச்சர் பிரதான பங்கு வகிக்கிறார்.

இன்றைக்கு சிறையிலே தொடர்ச்சியாக பல காலமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிற தமிழ் கைதிகளின் விடுதலை, அதிலே முக்கியமானதொன்று. காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி இன்னொன்று. எங்களுடைய நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுவது மிகவும் பிரதானமான ஒரு விடயம்.

ஆகவே நல்லிணக்கத்தை நாங்கள் ஒரு அரசியல் தீர்வு மூலமாக அடையலாமா இல்லையா என்பதை பெப்ரவரி 4ம் திகதிக்கு முன்னர் தெரிந்துகொள்ள வேண்டும், அதை நான் நாட்டுக்கும் உலகத்திற்கும் அறிவிக்கப்போகிறேன் என்று ஜனாதிபதி சொல்லுவதிலே நங்கள் இந்த விடயங்கள் முதலிலே தீர்க்கப்படவேண்டும். ஆனால் அதே வேளையிலே இறுதித் தீர்வு என்ன என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையாக நாங்கள் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். இன்று பின்னேரமும் ஒரு ஆயத்த கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது,

நாங்கள் அதற்குப் பிறகு 10ம் திகதியிலிருந்து பேச்சுவார்த்தையினை நடாத்தவிருக்கிறோம், இந்த வேளையிலே, எங்களுடைய கட்சியின் சார்பாக சில முக்கியமான விடயங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன். நாங்கள் தொடர்ச்சியாக, ஒரு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வைக் கோரி நிற்கின்றோம். அர்த்தமில்லாத அதிகாரப்பகிர்வு எவருக்கும் தேவையில்லை. அர்த்தமில்லாதிருந்தால் அது அதிகார பகிர்வே கிடையாது. ஆகவே அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு, ஒரு சமஷ்டி கட்டமைப்பினால் மட்டும்தான் முடியும் என்பதை திரட்டவட்டமாக நாங்கள் சொல்லுகிறோம், அதை சொல்லிக்கொண்டிருக்கும் போது தான் இதை தீர்க்க முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கையோடு வெளிப்படுத்தியிருக்கிறார். அதைச் சொல்லுகிறார், அதற்கான காலக் கெடுவையும் அவரே தீர்மானித்திருக்கிறார். வருகிற மாதம் 4ம் திகதிக்கு முன்னர் இது செய்யப்படவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் அந்தக் காலக் கெடுவுக்கு இணங்கியிருக்கின்றோம். ஏனென்றால் இது சம்பந்தமாக 35 வருடமாக பேசி பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன, பல இணக்கப்பாடுகள் ஈட்டப்பட்டிருக்கின்றன. அதை நடைமுறைப்படுத்துவதே தேவையானது தவிர புதிதாக நாங்கள் ஆரம்பத்திலேயிருந்து தொடங்கவேண்டியதில்லை.

ஆகவே, திரும்பவும் இந்த வருட ஆரம்பத்திலே இந்த பேச்சுவார்த்தையில் இன்றைக்கும் சென்று அதற்கான ஆயத்தங்களை செய்கிற வேளையிலே எங்களுடைய நிலைப்பாட்டை நாட்டுக்கும் உலகத்துக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்தக் கால கெடுவுக்குள்ளே இது முடிய வேண்டும், அது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக இருத்தல் வேண்டும் ஆனால் நிச்சயமாக தமிழ் தேசிய பிரச்சினை தீருகிறது என்று சொல்கின்ற போது தமிழ் மக்களுடைய நியாயமான அபிலாஷை அதனாலே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

இல்லையென்று சொன்னால் இது காலத்தை இழுத்தடிக்கும் ஒரு செயற்பாடாக இருக்குமென்று சொன்னால், எங்களுக்கு பலத்த சந்தேகங்கள் இருக்கின்றன, சந்தேகங்களோடுதான் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என்பதையும் திரும்பத்திரும்ப நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

சந்தேகத்தோடுதான் வருகிறோம். ஏனென்றால் பல தடவைகள் இப்படியான முயற்சிகள் எடுக்கப்பட்டு எதுவுமே முடிவடையாத ஒரு நிலையிலே பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வர மறுத்தோம் என்ற ஒரு பழிச் சொல் எங்களுக்கு வரக்கூடாது என்பதற்காக நாங்கள் இதயபூர்வமாக இதய சுத்தியோடு நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக சொல்லியிருக்கிறோம், ஆனால் அதனை செய்யத் தவறுமாக இருந்தால், அதனுடைய முழுப் பொறுப்பையும் அரசாங்கம் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்தக் காலக்கெடுவுக்குள்ளே இது செய்யப்படாவிட்டால் நாங்கள் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து வெளிப்படுத்துவோம், இந்த கால கெடுவுக்குள் இதனை செய்து முடிக்க இயலாது என்று தெரிந்துகொண்டே எங்களை ஏமாற்றுகிற நாடகத்தினை அரசாங்கம் அரங்கேற்றுகிறது என்று பலர் எங்களுக்கு எச்சரிக்கிறார்கள். அப்படியாக இருக்கவும் கூடும், ஆனால் ஒரு சிறிய காலக்கெடு, இந்த சிறிய காலக்கெடுவில் அது எமக்கு தெரியவரும், அப்படியாக ஒரு செயற்பாடாக இது இருக்குமாக இருந்தால், நாட்டினுடையதும் சர்வதேசத்தினுடையதும் கண்களிலே மண்ணைத் தூவுகிறமாதிரியான ஒரு செயற்பாடாக அரசாங்கம் இதைச் செய்யுமாக இருந்தால், அது தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தப்படும், அதனை உலகத்திற்கு நாங்கள் பறை சாற்றுவோம், உலகத்திற்கு சொல்லுகிறது மட்டுமல்ல, நாட்டிலேயே எங்களுடைய மக்களை அணி திரட்டி, எங்களுடைய நியாயமான அரசியல் சுதந்திரத்திற்காக நாங்கள் வௌ;வேறு வழிகளில் போராட்டங்களை முன்னெடுப்போம், இது ஜனாதிபதி கொடுத்த காலக்கெடுவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக விடுக்கப்படுகிற எச்சரிக்கையாகக் கூட அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம் என தனதுரையில் தெரிவித்தார். – Facebook M.A.Sumanthiran MP

SHARE