தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றமை தவறானது அல்ல-ரணில்

258

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றமை தவறானது அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

01_05_2012_May_Day_Sampanthan_Ranil_after IMG_1174

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வருவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாகவும் சில ஊடகங்கள் புலிக்கதையை கூறி மிரட்டுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

முஸ்லிம் மீடியா போரத்தின் 20 ஆவது வருட நிறைவு விழா கொழும்பு 7 இல் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

அங்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ரணில், சில ஆங்கில ஊடகங்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

சம்பந்தன் பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு சென்றதை தலைப்புச் செய்தியாக வெளியிட்ட ஐலண்ட் ஆங்கில பத்திரிகை, புலி வரப்போகின்றது எனவும் அதற்கு சம்பந்தன் தலைமை தாங்க போகின்றார் எனவும் செய்தி வெளியிட்டது.

இவ்வாறான செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் சம்பந்தன் இராணுவ முகாமிற்கு சென்றமை தவறில்லை எனவும் ரணில் கூறினார்.

இராணுவ முகாமிற்கு செல்லும்போது இராணுவத்திற்கு அறிவிக்க வேண்டிய தேவையுள்ளது. ஆனாலும் சம்பந்தனுக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் அந்த இடத்தில் ஏற்படவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

இந்த செய்தி வெளியானதை அடுத்து சம்பந்தனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இராணுவத்தில் சேரப்போகின்றீர்களா? என நகைச்சுவையாக கேட்டதாகவும் கூறிய ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகள் மீள எழுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும் உறுதியளித்தார்.

சமிந்த பெர்ணாண்டோ என்ற ஆங்கில செய்தியாளரை கடுமையாக விமர்சித்த ரணில் விக்கிரமசிங்க புலிகள் மீளவும் வரப்போகின்றார்கள் அங்கே புலிகள் இருக்கின்றார்கள் இங்கே பதுங்குகின்றார்கள் என்று செய்திகளை எழுதாமல் அது பற்றி பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம் எனவும் குறிப்பிட்டார்.

புலிகள் இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது வழக்குத் தொடர முடியும் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க, புலிகளை சரியாக அழிக்கவில்லை என்ற குற்றசாட்டையும் மகிந்த ராஜபக்ச ஏற்கவேண்டி வரும் என்றும் கூறினார்.

இதேவேளை கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பகுதிகளில் இராணுவம் கைப்பற்றியிருக்கும் தனியார் காணிகள் எதிர்வரும் இரண்டு மாதங்களில் விடுவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இந்த காணிகள் விடுதலை செய்யப்படுகின்றமை குறித்து அந்தந்த இராணுவ முகாம்களிலுள்ள தலைமை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

எனினும் எந்த அளவு காணி விடுவிக்கப்படும் என்பது பற்றி பிரதமர் இதன்போது குறிப்பிடப்படவில்லை. கடந்த காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவே தனியார் காணிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்.

SHARE