தமிழ் அரசியல் கைதிகளின் பிணை விடுதலை என்பது ஆபத்தானது

317

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டங்களில் பங்கெடுத்த போராளிகளே கடந்த பல வருட காலங்களாக சிறை களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர் களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதே சாத்தியமானதொன்று. தவறும் பட்சத்தில் பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஏற்கனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகள் பலர் மீண்டும் குற்றத்தடுப்பு புலனாய்வினரால் விசாரணை செய்யப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் காணாமற் போன சம்பவங்களும், ஆங்காங்கே கொலை களும் நடந்தேறியிருக்கின்றன. மீண்டும் அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படுவதற்கு நாம் வாய்ப்புக்களை வழங்கக்கூடாது. பல்வேறு தாக்குதல்களில் பங்கெடுத்த போரா ளிகளே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், அவர்களுடைய வழக்குகள் துரிதப்படுத்தப்படாத நிலையில் இன்னமும் சிறைவைக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக ஜே.வி.பியினருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதைப்போல இவர்களுக்கும் வழங்குவதன் ஊடாக ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

பிணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்களானால் இவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம். இதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அல்லது ஏனைய அமைச்சர்கள் உத்தரவாதம் வழங்குவார்களா? பிணையில் விடுதலை செய்யப்படுவதென்பதன் அர்த்தம் அவர்கள் விளக்கமறியல் கைதிகளாகவே இருக்கின்றார்கள் என்பதுதான். முதற்படியாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதற்கான வழிமுறைகளில் ஈடுபடலாம். பொதுமன்னிப்பின் மூலமே இவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்னும் கோரிக்கையினை முன்வைப்பதன் மூலமாக ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.
பிணைகளின் மூலம் இவர்களை விடுதலை செய்யும்போது நாட்டிலிருந்து இவர்கள் வெளியேறுமிடத்து பிணை வைத்தவர் அவருக்குப் பதிலாக கைதுசெய்யப்படவேண்டிய சூழ்நிலை உருவாகும். இவர்களுக்குப் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய அரசு ஏன் தயங்கவேண்டும் என்பதை சிந்திக்கவேண்டும். யுத்தம் நிறைவடைந்து 06வருடங்களைக் கடந்த பின்னும் மீண்டும் யுத்தம் இந்நாட்டில் ஏற்படும் என்ற அடிப்படையில் சிந்திக்கின்றார்களா? சர்வதேச ரீதியாக தமிழினத்தின் விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் அரசி யல்கைதிகளின் விடுதலையில் அக்கறை கொள்ளாமல் இருப்பது மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் உருவாகும் என்பதனாலா? சட்டங்கள் என்பது அனைவருக்கும் சமமாகவே அமையவேண்டும். பிரிவினைகளுக்கு இங்கு இடமேது. பொதுமன்னிப்பின் மூலம் விடுதலை செய்யக்கூடாது. விசாரணைகள் என்ற அடிப்படையில் சித்திரவதைகளை மேற்கொள்வதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இடமளிக்கக்கூடாது. அதேவேளை புனர் வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட போராளிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

பொதுமன்னிப்பு-பினையில் விடுதலை என்பதில் வித்தியாசம் இருக்கிறது. கைதி களின் நலன்கருதி பொதுமன்னிப்பு வழங்குவதே சிறந்ததொன்றாகும். கருணா- பிள்ளையானின் மூலம் விடுதலைப்புலிகளை பிளவுபடுத்தியதோடு, இவர்கள் இருவருக்கும் இடையில் பிரிவினைகளை ஏற்படுத்தி, அவர்களை கைதுசெய்து, தண்டனை வழங்கும் செயற்பாட்டுக்கே அரசாங்கம் வழிவகைகளை மேற்கொள்கிறது. தமிழ் இனத்துக்கெதிராக அடக்குமுறையைக் கையாள்கிறது என்று கூறலாம். அரசாங்கம் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்த்துக்கொண்டிருக்கிறது என நினைத்துவிடக்கூடாது. கடந்தகால அரசின் நிகழ்ச்சி நிரலில் இருந்து அவர்கள் இன்னமும் மாறவில்லை: இனியும் மாறப்போவதுமில்லை. யுத்தப்பாதையில் மீண்டும் பயணிக்க அரசு ஆயத்தமாகிறது. ஆகவே இவற்றைக் கருத்திற்கொண்டு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினைப் பற்றி நன்கு ஆராய்ந்து பொதுமன்னிப்புடன் அவர்கள் சிறைகளில் இருந்து வெளியேறுவதே சிறந்தது. அதற்காக தமிழ் தரப்பினர் குரல் கொடுப்பது கட்டாயமாகும்.

SHARE