தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் – வடமாகாணசபை

271

போருக்குப் பின்னரான தமிழர் வாழ்வு என்பது சீரும் சிறப்பு மிக்கதாகவும் மகிழ்ச்சி மிக்கதாகவும் உள்ளதாக உலகுக்குக் காட்டப்படுகின்றது. ஆனால், உண்மைநிலை அவ்வாறு இல்லை. தமிழ்மக்களின் அவல வாழ்வு தொடர்கதையாகவே நீடிக்கின்றது.

போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டபோதும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்குத் தீர்வு கிட்டியபாடில்லை. எம் தந்தை எப்போவருவார், என் கணவர் எப்போ விடுதலையாவார் எம் பிள்ளையை நாம் எப்போது பார்ப்போம் என்று பிள்ளைகளும் மனைவியரும் பெற்றோரும் கண்ணீரும் கம்பலையுமாக அவர்களின் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். விடுதலையை யாசித்து எல்லோருடைய கதவுகளையும் தட்டிவருகின்றனர் பலர் எம்மை நாடிவந்து கதறி அழுவது ஆற்றொணாத மனச்ச ஞ்சலத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து பல்வேறு கொடூரமான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை யெல்லாம் பொது மன்னிப்பில் விடுதலை செய்தஅரசாங்கம், இப்போது தமிழ்க் கைதிகள் என்றவுடன் வேறொரு முகம்காட்டி நிற்கின்றது.

நல்லிணக்கத்தைஏற்படுத்துவதற்காக,தமிழ்மக்களைஆதரவுவழங்குமாறுகோரிஅவர்களின் வாக்குப் பலத்தோடு ஆட்சியமைத்த புதிய அரசாங்கமாவது அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்கும் என்று நம்பியிருந்தோம். ஆனால், இந்தஅரசாங்கமும் இதய சுத்தியுடன் நடந்து கொள்வதாகத் தெரியவில்லை. தங்கள் விடுதலையை வலியுறுத்தி சிறையில் இக்கைதிகள் உணவுமறுப்பில் ஈடுபட்ட போது,அவர்கள் விடுதலைக்கு வாக்குறுதி வழங்கிய அரசாங்கம் அதனைநிறை வேற்றாமல், குறைந்த எண்ணிக்கையானவர்களை குறித்தகால இடை வெளிக்குள் பிணையில் விடுவிப்பதாகச் சொல்கின்றது. ஒற்றுமையாக உண்ணா மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளிடையே பிளவுகளை ஏற்படுத்தி, அவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தைச் சிதைக்கும் தந்திரோபாயமாகவே  இதனைக் கருதத் தோன்றுகிறது.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ளாத தமிழ் அரசியல் கைதிகள், மீளவும் உணவுமறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தங்களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாகப் பொது வேலைநிறுத்தப் போராட்ட மொன்றுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்;. அவர்களது கோரிக்கையைச் செவிமடுத்த பொது அமைப்புகளும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடமாகாணம் தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் இந்தப் பொது வேலைநிறுத்தத்துக்கு வடக்கு மாகாணசபையினராகிய நாமும் எமது ஆத்மார்த்தமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன், எமது அமைச்சரவை இது பற்றிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. நாம் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களை விரைவில் காணும்போது இதுபற்றிப் பேசுவோம்.

அரசியல் கைதிகளின் விடுதலையை உடனடியாக நிறைவேற்றக் கோரி இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச அரசாங்கத்துக்கும் உரத்துச் சொல்லும் விதமாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது மருத்துவ சேவை போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அத்தோடு பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படாதவாறு கண்ணியம் காக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

எதுஎவ்வாறு இருப்பினும் தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விரைவில் விடுவிக்கப்படவேண்டும் என்பதே எமது வடமாகாணசபையினரின் எதிர்பார்ப்பு.

நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடக்குமாகாணம்

SHARE