தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் கோரிக்கை

316
தமிழ் அரசியல் கைதிகள் பிரதான இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சத்திவேல் தெரிவித்துள்ளார்.

மெகஸின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  அவர்  இதனைக் குறிப்பிட்டார்.

சிறைவாசம் அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் தாம் கைது செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை தங்களது குடும்பத்தார் எந்தவித பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களை கொண்டாடவில்லை என அரசியல் கைதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பின்னணியில் தைப்பொங்கல் தினத்தை தேசிய விழாவாக அரசாங்கம் வடக்கில் கொண்டாடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும், அது தமக்கு வருத்தமளிப்பதாகவும் சிறைக்கைதிகள் தெரிவித்ததாக அருட்தந்தை  கூறினார்.

அத்துடன், ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தின் போது தமது உறவினர்களை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறும் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, புதிய அரசியலமைப்பு அனைத்து மதங்களுக்கும் மக்களுக்கும் சமவுரிமையை வழங்கக்கூடிய வகையில் அமைய வேண்டும் என அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE