தமிழ் இயக்கங்களின் போராட்டம் தான் பிரதானமாக இலங்கையில் அதிகாரப்பகிர்விற்கான அக்கறைகளை தோற்றுவித்தது.

454

TNA052013

 

தமிழ் இயக்கங்களின் போராட்டம் தான் பிரதானமாக இலங்கையில் அதிகாரப்பகிர்விற்கான அக்கறைகளை தோற்றுவித்தது. ஆனால் அது இலங்கையில் என்ன நிலையில் இருப்பினும் 13வது திருத்தத்தை உருவாக்குவதில் இந்த இயக்கங்களின் போராட்டமும், இந்தியாவின் அரசியல் அழுத்தமும் முக்கிய பங்கு வகித்தன. ஆனால் அதற்கு சம்மந்தம் இல்லாதவர்கள் பலர் இன்று மக்களின் பிரதி நிதிகளாகியுள்ளனர். இவர்கள் அதிகாரப் பகிர்விற்கான இயக்கத்தை உண்மையிலேயே முன்னெடுத்துச் செல்கிறார்களா? அது தான் இல்லை. நாம் ஜெனிவாவில் பேசுகிறோம். அமெரிக்க ராஜாங்கச் செயலகத்துடன் பேசுகின்றோம். தென்னாபிரிக்காவுடன் பேசுகின்றோம். என்று புலுடாவிட்டுக் கொண்டு திரிகிறார்கள்.

army eprlf_1986 federalparty manikkadasan-guards militant_unity1

உள்ளுரில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதைவிட இருக்கும் அதிகாரப்பரவலாக்கல் கட்டமைப்பை யாதார்த்தமாக்குவதை விட உலகம் சுற்றுவது இவர்களுக்கு சௌகரியமாக இருக்கிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு என்று வந்துவிட்டால் தம்முடைய சௌகரியங்கள் கெட்டு விடும் என இவர்கள் அஞ்சுகிறார்கள். பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படுவதை விட அதனை தக்கவைப்பதையே இவர்கள் உளமார விரும்புகிறார்கள்.

மக்களின் அன்றாட பிரச்சினைகள் என்று அளவு கணக்கற்று இருக்கின்றன. வறுமை, பாதுகாப்பின்னை, அநாதரவுநிலை, நிலம், வீடு சுகாதாரம், பாதை, போக்குவரத்து, கல்வி சமூகப்பிரச்சினைகள் என ஏராளம். தமக்குள் எந்த புரிதலும் இல்லாமல் தமது தனிப்பட்ட நலன்கள் சார்ந்து இங்கும் இவர்கள் தேர்தல் சமயங்களில் தனிநாடு, சுயநிர்ணயம், இனமானம் பற்றி பேசுவார்கள். இவர்களது இந்த அரசியல் உள்ளுரில் மக்களுக்கு கிடைக்கவேண்டிய ஜீவாதார நலன்களைப் பாழடித்து விடுகின்றது.

எமது மக்களுக்குத் தேவை சாமானிய மக்கள் தலைவர்களே. வடஅமெரிக்க மேற்கத்தைய மற்றும் புலம்பெயர் அதிகாரசக்திகளின் கடாட்சத்துடன் தமது சொந்த அலுவல்களைப் பார்ப்பதற்கான நடைமுறைகளே பெருமளவில் காணப்படுகின்றன. ஒரு சிலருக்கு சமூகம் அக்கறை இல்லை என்றில்லை. எனினும் அது ஆக்கபூர்வமாக, கனதியாக சமூகத்தை எட்டவில்லை.

பேரழிவைச் சந்தித்த சமூகத்தை மீண்டெழச் செய்தவதற்கு பதிலாக விபரீதங்களுக்குள் சிக்கவைக்கும் போக்கே அதிகமாக காணப்படுகின்றது. வன்முறையற்ற, ஜனநாயக பூர்வமான சுதந்திரத்திற்கான இடைவெளிகளை உருவாக்குவதற்கான விருப்பங்கள் காணப்படவில்லை.

தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் சரி, மாகாணசபை, உள்ளுராட்சி பிரதிநிதித்துவமும் சரி வெறும் அதிகாரங்கள், பதவிகள் என்பவற்றுக்கப்பால் மக்களுக்கு எத்தகைய பலாபலன்களை ஏற்படுத்தியுள்ளன? 30 ஆண்டுகால இழப்புகளுக்கு வரவில்லை. அதுபற்றி கரிசனைகளும் இல்லை. தமது பதவிகள் இது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரச்சனை. பதவிகள், அதிகாரங்கள் மக்களுக்கானவை அல்ல. தமது சொந்த தனிப்பட்ட நலன்களை முதன்மைப்படுத்தியவை.

ஜனநாயக உணர்வு கொண்ட இயங்கங்களில் இருந்தவர்களுக்கு தவறுகள் விதிவிலக்குகளுக்கு அப்பால் சமூக நலன்களே முதன்மையானவையாக இருந்தன. சமூகவிடுதலை, தியாகம் என்பனவெல்லாம் இன்று கேள்விக்குரியானவாக மாறிவிட்டன. இன்று எல்லாமே அர்த்தம் இழந்து போய்விட்டன. சுய நலமும், பதவி வெறியும் கொண்டவர்களுக்கே இன்று சமூக மரியாதையும் இருக்கிறது. போராடியவர்கள் இன்று தீண்டத்தகாதவர்களாகப் போய்விட்டார்கள். எமது சமூகத்தின் ஆதிக்க மனோநிலை அப்படித்தான் இருந்தது.

இன்று தமிமிழ் அரசியல் பெருமளவிற்கு அயோக்கியர்களின் கூடாரம் என்று கூறுவதில் எனக்கு எந்த கூச்ச நாச்சமும் இல்லை. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பார்கள். 30 வருடம் யுத்தத்தையும், அழிவையும் சந்தித்த ஒரு மக்கள் சமூகத்தின் மத்தியில் வேலைசெய்பவர்கள் குரோதங்கள், விரோதங்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு குறைந்த பட்ச இணக்கப்பாட்டுடன் வேலை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால் உள்ளுரிலும், புலம்பெயர் தளத்திலும் அதனை மருந்துக்கும் காணமுடியாது.

 

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சொந்த நிலத்தை விட்டு ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சமூகம் தொடர்பாக இவர்களுக்கு எந்த பொறுப்புணர்ச்சியும் கிடையாது. அது ஓடித்தீரும் வரை அரசியலை நடத்துவோம் என்றவாறே இவர்களது செயற்பாடுகள் அமைகின்றன. உள்ளுரில் ஒரு கண்ணியமான வாழ்வு என்பது இவர்களது மனங்களில் இல்லை. அவலம் இவர்களின் பிiழைப்பாகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கும், ஏனைய சமூகங்களுக்கும் சிறப்பான வாழ்வொன்றை கட்டியெழுப்ப இவர்கள் பங்களிக்க முடியும். ஆனால் இவர்கள் அதனை விரும்பவில்லை. இலங்கையின் ஆட்சியாளர்களும், இலங்கை பல்லினங்களின் தேசமாக மிளிர்வதை விரும்பவில்லை.

வௌ;வேறு சமூக காலாச்சார தேசிய அடையாளங்கள் அவற்றின் முக்கியத்துவம் இன்றைய உலகியல் யதார்த்தம் அவர்களுக்குத் தெரியாதென்றில்லை. அவர்கள் தமது சொந்த அதிகாரத்திற்காக ‘ஒரே நாடு ஒரே மக்கள்’ என்கிறார்கள். அவ்வாறு அச்சில் வார்த்தது போல் மனிதர்கள் இருப்பதில்லை. பேரினவாதத்திற்கு சிறுபான்மை இன சமூகங்கள் கீழ்ப்படியவேண்டும். என்று வேறு வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. இங்கு அதிகாரத்திற்கு பேரினவாதம் தேவைப்படுகிறது. படைப்பலம் தேவைப்படுகிறது. இன்றைய அதிகார அகங்காரத்தின் உலகப் பொதுவான போக்கு இத்தகையது தான்.

ஆனால் பெரிவாரியான மக்களின் சுதந்திரம் ஜனநாயகம் பற்றியே இப்போது பேசவேண்டியிருக்கின்றது. இன சமூகங்களின் சுதந்திரமான ஐக்கியமே பாதுகாப்பான வாழ்வையும், பொருளாதார சமூக முன்னேற்றத்தையும் ஏற்படுத்தக் கூடியது. செயற்கையாக உருவாக்கப்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில் ஒரு நாடு முன்னேற முடியாது.

1970களின் பிற்பகுதியிலும் முற்பகுதியிலும் தோற்றுவிக்கப்பட்ட சூழ்நிலைகள் எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தியுள்ளன என்பது வரலாறு, ஆனால் அதிகாரப் பேராசை இந்த விபரீதங்களை நோக்கியே அழைத்துச் செல்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் தலையெடுத்த இந்த போக்கு ஒரு விசச் சூழல் போல் திரும்ப திரும்ப வந்து கொண்டிருக்கிறது. எமது சமூக வாழ்வை அரித்தழித்து வருகிறது. இலங்கையின் அனைத்து இன சமூகங்களும் எட்டியிருக்க கூடிய அரிய சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டிருக்கின்றன.

கடந்து வந்த 30 வருடங்களில் இழக்கப்பட்ட மனித உயிர்களின் இன்றைய பெறுமதி என்னவென்றால் பெருவெப்பம் நிறைந்த பாலை நிலம் ஒன்று மனங்களில் விரிகிறது. இதுவரை கால வரலாறுகள் யாவும் வர்க்க போராட்டத்தின் வரலாறே என்று கம்யூனிஸ்கட்சி அறிக்கையின் முதல் வரியாக மார்க்ஸ் ஏங்கல்ஸ் பிரகடனம், ஆனால் இலங்கையின் இனசமூக ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடியவர்களுக்கு இன்று என்ன சமூகப் பெறுமானம் இருக்கிறது என்பது முக்கியமான கேள்வியாகும்.

அனேகமான அறம் சார் போராட்டங்களின் பின்னரும் அதற்கு சம்பந்தமில்லாத கூட்டமொன்று அதிகாரத்திற்கு வருகிறது. விதி விலக்காகவே போராட்டத்திற்கும், புதிய அதிகாரத்திற்கும் தொப்புள்கொடி உறவு காணப்படுகிறது. அதற்கு இலங்கையின் சுதந்திர இயக்கமும் அதற்கு பின் வந்த அதிகாரமும் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டமும் உருவாகிய அதிகாரங்களும் விதிவிலக்கில்லை. சுதந்திரம் விடுதலையென எழுச்சி கொள்பவர்கள் எழிலர்ந்த கனவுகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் நாம் கண்முன்னேயே கனவுகள் சிதைவையும் கண்டோம். எனவே சுதந்திர இயக்கத்தின் செல்நெறி என்ன என்பது பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும்.

இப்போதைய சமூக அக்கறையற்ற களவாணி அரசியலுக்கு மாற்றான ஒரு பாதையை நாடளாவிய அளவில் உருவாக்குவது எவ்வாறு என்பது பற்றி சிந்தித்தாகவேண்டும். எத்தகையபெயரிய வரலாற்று துன்பியல் நிகழ்ந்திருக்கிறது என்ற பிரக்ஞை இல்லாமலே வாழ்கிறோம். சுமூகப் பிரக்ஞையுடன் போராடியவர்கள் மடிந்த பூமியில் பரவலாக வெட்க கரமான ஆசாடபூதிகளும், சுயநல மிகளும் மக்களின் சார்பாக அதிகாரம் பெற்றுள்ளார்கள்.

இது முன்னைய நிலையை விட மோசமானதையே ஸ்தாபிக்கும். கபடதாரிகளும் – களவாணிகளும் மக்களின் சார்பாக அதிகார சக்திகள் ஆகும் போது சமூக பண்பாட்டு மறுமலர்ச்சியோ, பொருளாதார அபிவிருத்தியோ ஏற்பட சாத்தியமில்லை.

நெற்றிப்பொறியன்

SHARE