தமிழ் கட்சிகளும் அடுத்த தலைமையும்….

242
ஆரம்பகாலத்தில் (செல்வநாயகத்தின்) தமிழரசுக்கட்சியாகவும் (G.G .பொன்னம்பலத்தின்)அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியாகவும் பிளவுபட்டிருந்த தமிழர்களின் ஓட்டுக்கள் பின்னர் இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழர் விடுதலை கூட்டணி என்று ஒன்றை உருவாக்கியபோது ஒன்று சேர்க்கப்பட்டது. பின்னர் தமிழ் விடுதலை இயக்கங்களின் அரசியல்பாதை திரும்பலுக்கு பின்னர் தமிழ் மக்களின் ஓட்டுக்கள் நாலாபுறமும் திருப்பப்பட்டன, ஆனாலும் தமிழர் விடுதலை கூட்டணியே பலமானதாக இருந்து வந்தது. கடந்த 2004 பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியுடன் தலைமையின் மீதான நம்பிக்கை இன்மையால் அதிகமான தமிழர் விடுதலை கூட்டணி எம்பிக்கள் (கட்சித்தலைவர் ஆனந்த சங்கரியை விடுத்து மீதி அனைவரும் ) தத்தமது பழைய கட்சிகளுக்கே சென்றனர் (தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கரஸ் )

பின்னர் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கரஸ் மற்றும் EPRLF கட்சியின் ஒரு பிரிவான சுரேஷ் பிரேமச்சந்திரன் (இன்றைய தமிழ் கூட்டமைப்பின் பேச்சாளர்) பிரிவினரும் ஸ்ரீகாந்தா தலைமையிலான TELO அமைப்பினரும் இணைந்து உருவாக்கியதே சென்ற ஜனாதிபதி தேர்தல் வரையில் ஒற்றுமையாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு. ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து TELO வின் சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தாவும் தமிழ் காங்கிரஸ்காரர்களும் பிரிந்து தனித்து போட்டியிடுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு சென்ற தேர்தலில் யாழ்மக்களால் அதிகளவு ஓட்டுப்போட்டு (?) நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட பல்கலைகழக முன்னாள் மாணவன் கஜேந்திரன் இந்ததடவை தமிழ் காங்கிரசில் போட்டியிடுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சித்தலைவர் விநாயகமூர்த்தி தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக தலமைபதவியை உதறிவிட்டு தமிழ் தேசியகூட்டமைப்பில் போட்டியிடுகின்றார், இப்போது இந்த முடிவை எடுக்காவிட்டால் தான் தமிழின துரோகியாகிவிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, EPDP (பொதுமக்கள் ஐக்கிய முன்னணி ),EPRLFவரதர்அணி,சிவாஜிலிங்கத்தின் இடதுசாரி கூட்டணி , PLOTE , தமிழர் விடுதலை கூட்டணி ,மகேஸ்வரன் குடும்பம்  (ஐக்கிய தேசிய கட்சி) , பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் மற்றும் ஏராளமான சுயேட்சைகள் என்று இந்ததடவை இந்ததடவை தேர்தலில் களமிறங்குவதால் தமிழ் மகளின் ஓட்டுக்கள் முன் எப்போதும் இல்லாதவாறு பிரிந்துதான் போகப்போகின்றன. தமிழனின் கடந்த கால ஒற்றுமையற்ற நிலைக்கு கிடைத்த பரிசுதான் இன்றைய நிலைமை, ஆனால் இன்று தமிழினம் அன்றிலும் பாக்க இன்னமும் பலமடங்கு பிளவுபட்டு நிற்கிறது(நிறுத்தப்பட்டிருக்கிறது).இந்த நிலை மாறினால் அனைத்தும் கிடைக்கும் இல்லையேல் 13 ++ அல்ல 13 — கூட கிடைக்காது. சரியோ தவறோ இன்மேலும் அனைத்து தமிழ் கட்சிகளும் பழசை மறந்தோ மன்னித்தோ ஒன்று சேர்ந்தாலன்றி இலங்கை தமிழருக்கு ஒருபோதும் நிலையான தீர்வு கிடைக்க போவதில்லை.

அடுத்து இன்றைய தினத்தில் இலங்கையின் தமிழ் கட்சிகளின் மிகப்பெரும் கவலைக்கிடமான விடயம் அடுத்த தலைவர் யார்? என்பதும், இளம் தலைமுறையினரில் ஓரளவேனும் அனுபவமுள்ள அரசியல்வாதிகள் யாரும் இல்லாமையுமே. அரசியல் தெரியாத கஜேந்திரனையும் தமிழர் பிரதேசங்களே சரியாக தெரியாத கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் விடுத்தால் அனைத்து தமிழ் கட்சிகளும் தற்போது அறிவித்துள்ள வேட்பாளர்களின் பெயர்களிலும் சொல்லிக்கொள்ளும்படியாக இளைஞர்கள் யாரும் அங்கம் வகிக்கவில்லை. அடுத்து எந்த கட்சியிலும் இரண்டாம் நிலை தலைவர் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தந்தை செல்வாவிற்கு பின்னர் அதிமேதகு அரசியல் தலைமை தமிழர்களுக்கு வாய்க்கவில்லை என்பது ஒரு புறமிருக்க இப்போது டக்ளசுக்கு பின்னர்  EPDP இலும் , சித்தார்த்தருக்கு பின்னர் PLOTE இலும், EPRLF  இல் சுரேஷிற்கு பின்னரும் வரதருக்கு (வரதர் அணி )பின்னரும் , TELO விலும் அடுத்த தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. அதேபோல தமிழரசுகட்சியில்சம்பந்தர், சேனாதிராஜா தவிர பழையவர்கள் யாருமில்லை. அதுதவிர பெயர் சொல்லும் அளவுக்கு இளைஞர்களும் யாரும் இல்லை(ரவிராஜ் இருந்திருந்தால்?) என்பதால் முக்கியமாகதமிழரசு கட்சியினர் தமது இளைஞர் அணியையும் எதிர்கால தலைமைகளையும் அடையாளம் காணவேண்டிய நேரமாக இது இருக்கிறது. தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைகூட்டணியினர் எப்படியும் ஒருநாள் நிச்சயம் தமிழரசுக்கட்சியில் இணைவார்கள் என்பது உறுதி என்பதால் அவர்களைபற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை.

SHARE