தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடு -சிவசக்தி ஆனந்தன்

121

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடும் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியமைதான் அரசியல் கைதிகளின் விடுதலையை வென்றெடுக்க முடியாதுள்ளமைக்கு காரணம் என ஆயுள் தண்டனை பெற்ற அரசியல் கைதியான சச்சியானந்தம் ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பாக எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்

அண்மையில் கிளிநோச்சியில் இறந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியின் மனைவியினுடைய மரண இறுதிச்சடங்கில் ஏற்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மனிநேயமுள்ள அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கைதியான சச்சியானந்தம் ஆனந்த சுதாகரனின் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையாகிய மகனார் தாயாருடைய உடலுக்கு தகனம் செய்வதற்காகவும் மற்றைய குழந்தையாகிய மகள் ஆயள் தண்டனை பெற்ற அரசியல் கைதியாகிய தனது தந்தையுடன் சேர்ந்து பொலிசாருடைய வாகனத்தில் ஏறிச் சென்ற சம்பவமானது ஒட்டுமொத்தமாக மனிதநேயமுள்ள அனைவரையும் இச்சம்பவம் உலுக்கி போட்டுள்ளது.

ஆகவே இந்த அரசியல் கைதிகளின் விடுதலையானது விரைவுபடுத்தப்பட வேண்டும். இறுதியுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் பல்வேறுப்பட்ட சிறைச்சாலைகளில் 110 மேற்பட்ட அரசியல் கைதிகள் தங்கள் விடுதலை தொடர்பாக நீண்டகாலமாக பல்வேறுபட்ட சாத்வீகப் போராட்டங்கள், உண்ணாவிரதம் என பல போராட்டங்களை செய்துள்ளனர்.

இருந்தபோதும் அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதியின் வேண்டுகொளை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் இந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்து உங்களை ஆறுமாத காலத்திற்குள் விடுதலை பெற்றுக்கொடுப்பேன் என்று கூறியும் இன்று இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் சிறைச்சாலையில் இருக்க கூடிய அரசியல் கைதிகளின் விடுதலையானது ஒரு தொடர்கதையாக சென்று கொண்டிருக்கிறது.

இது அரசியல் கைதிகளுக்கு மாத்திரமல்ல அவர்களின் உறவுகள், குடும்பம் அவர்களின் பிள்ளைகள் சமூகத்திலேயே இது ஒரு பாரிய தாக்கத்தை உறவினர் நண்பர்கள் மத்தியில் இது ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையிலுள்ள சட்டத்தினூடாகவோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாகவோ இந்த கைதிகளின் விடுதலை என்பது இயலாத விடயமாகவே இருக்கிறது. ஒரு அரசியல் கைதிக்கு எதிராக ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது.

ஒவ்வோரு வழக்கிற்கும் ஐந்து வருடம் எட்டு வருடம் என்று தீர்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன்இந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்காக விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டு அந்த நீதிமன்றத்தினூடாக இந்த வழக்குகள் துரிதமாக விசாரிக்கப்படும் என்று சொன்னாலும் கூட உண்மையில் அந்த விசேட நீதிமன்றஙகளினூடாக எந்த அரசியல் கைதிகளைம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக இந்நீதிமன்றங்களினூடாக இலங்கையிலிருக்க கூடிய சமூக விரோதிகளே விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அதே போல் ஒவ்வொரு வருடமும் சுதந்திரதினத்தில் ஜனாதிபதியால் பொது மன்னிப்பின் மூலம் நூற்றுக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் முழுக்க முழுக்க சிங்களவர்களாக இருக்கிறார்கள், இச்சிங்கள கைதிகள் போதைப்பொருள் மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்களை செய்த சமூக விரோதிகளாக இருக்கிறார்கள் அவர்களுக்கே ஜனாதிபதி பொது மன்னிப்ப வழங்கி விடுதலை செய்கிறார்.

உண்மையில் இந்த நாட்டில் அரசியில் ரீதியாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத்தான் இப்போது அரசியல் கைதியாக இருப்பவர்கள் ஆயுதம் தூக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டவர்கள்.

இந்த நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு தலைவர்களும் தமிழ் மக்களுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு அடக்கியதன் விழைவுதான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள். தமிழ் மக்களுடைய விடுதலைக்காக, தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைக்காகதான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள். தங்கள் தனிப்பட்ட தேவைக்காக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கவில்லை.

யுத்தம் முடிவடைந்து ஒரு தரப்பு சந்தேகத்தின் அடிப்படையில் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை, கைதுகள், கடத்தல்கள், கப்பம் வாங்கியமை தொடர்பான ஒரு சில வழக்குகள் நீதி மன்றத்திற்கு வந்தும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இன்னும் பல கொலைகளுடன் சம்பந்தப்பட்ட படையினருக்கு எந்தவிதமான விசாரணையோ, தண்டனையோ வழங்கப்படவில்லை. ஆகவே யுத்ததம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் ஒரு தரப்பை மாத்திரம் சிறைக்குள் அடைத்து வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும், நம்பகத்தன்மையை கட்ட வேண்டும் என்று ஜனாதிபதி வடக்கிற்கு வரும்போது வார்த்தை ஜாலங்களால் தன்னுடைய கருத்தை தெரிவிக்கிறார் ஒழிய நடைமுறையில் ஒன்றுமில்லை.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியால் கடந்த மூன்று வருடங்கள் குறைந்த பட்சம் நல்லெண்ணத்தை, நம்பிக்கையை கட்டியெழுப்ப இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்திருக்கலாம் அல்லது இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவித்திருக்கலாம், காணாமல் செய்யப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் ஒரு வருடமாக நீடித்துக்கொண்டிருக்கிறது அவர்களுக்கு ஒரு பதிலை சொல்லவில்லை.

எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத அரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மூன்று வருட காலம் தங்களுடைய எதிர்க்கட்சி தலைவர் பதவி, குழுக்களின் பிரதித் தலைவர் பதவி, மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் தலைவர் பதவிகளுக்காகவும், அரசாங்கம் போடுகின்ற எலும்புத்துண்டுகளுக்காகவும் நிபந்தனையற்ற ஆதரவினை வரவசெலவுத்திட்டம் மற்றும் ஐநா சபையில் இலங்கைக்கு கால நீடிப்பை கொடுப்பதற்கு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருந்தனர்.

இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முறைமையானது நாட்டிற்கு உகந்தது இல்லை என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சொல்கிறார். ஆனால் இதே உள்ளுராட்சி தேர்தல் சட்டம் 60 க்கு 40 என பாராளுமன்றத்திலே வரும் போது அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான் முன்னின்று ஆதரவு வழங்கியவர்கள் அதேபோல் மாகாணசபை திருத்தச்சட்டம் ஐம்பதுக்கு ஐம்பது வரும்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதற்கு ஆதரவு வழங்கியவர்கள் ஆகவே பாராளுமன்றத்திலே தமிழ் மக்களுக்கு விரோதமான சட்டமூலங்கள் வரும்போது கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு வழங்குவதுடன் அதற்கு சொல்லப்படும் விளக்கம் இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பலத்தோட இருக்கிறது என்பதை நாங்கள் நிருபிக்க வேண்டும். புதிய இடைக்கால அறிக்கைக்குள் ஈழம் என்கிற சொல்லை தவிர அறிக்கையில் சம்ஸ்டி உள்ளடங்கப்பட்டுள்ளது என சொல்கிறார்கள்.

இறுதியாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுகான சட்டத்திருத்தங்கள் கூட கொண்டுவரப்பட்டது அப்போது தமிழரசுக்கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் காலையில் சட்டத்தை எதிர்த்து மிக ஆவேசமாக பேசுவார்கள் ஆனால் மாலையில் வாக்கெடுப்பு நடத்தும் போது அதற்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள்.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடும் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியமைதான் அரசியல் கைதிகளின் விடுதலையை வென்றெடுக்க முடியாதுள்ளமைக்கு காரணம் ஆகவே இந்த நிலைமையில் இருந்து விடுபட வேண்டுமானால் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க கூடிய அளவிற்கு ஒரு பலமான ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டிய தேவையிருக்கு அந்த ஐக்கிய முன்னணி தற்போதுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய தமிழரசுக்கட்சி தன்னுடைய கட்சியை முன்னிறுத்துவதற்கு அல்லது தனது கட்சி சார்ந்தவர்களுக்கு பதவிகளையும் பணத்தையும் பெற்றுக்கொள்வதற்கு அப்பால் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஒரு பலமான சக்திவாய்ந்த ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்பதற்காகவும், ஒரு பலமான கட்டமைப்பை உருவாக்கி அதனூடாக இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுக்க முடியும்.

இதை புலம்பெயர்ந்த மக்களாக இருக்கலாம் அல்லது இங்கிருக்க கூடிய மக்களாக இருக்கலாம் எமது தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்ற தலைவர்கள் எதை நோக்கி போகிறார்கள் யாருக்காக அவர்கள் இருக்கிறார்கள் மக்களிடம் வாக்குகளை பெற்றுக்கொண்டு ஒரு பக்கத்தால் அரசுக்கு முண்டு கொடுத்து பாதுகாத்து கொண்டு இன்னுமொரு பக்கத்தால் ஐநா மனித உரிமை பேரவையிலே நாங்களும் குரல் கொடுக்கிறோம் என்று இரட்டை வேடம் போடுகின்ற தமிழ் தலைமைகள் பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் அதனூடாகவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்தார்.

SHARE