சிவில் யுத்தத்திற்கு பின்னரான வடுக்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களிடத்தில் உள்ளன.
அதன் பிரகாரம் நல்லிணக்க பொறிமுறைகளை உருவாக்குவதில் உள்ள தடைகளை கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டையோன் தெரிவித்தார்.
அதேதேநேரம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பக்கபலமான அம்சமாக விளங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் நேற்று இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கனடாவுக்கிடையிலான தொடர்பு மறக்க முடியாத ஒன்றாகும். இலங்கையில் சுதந்திரம், நல்லிணக்கம் மறறும் அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் கனேடிய அரசாங்கம் என்றும் உறுதுணையாக இருக்கும்.
இந்த விஜயம் மூலம் இலங்கையின் தற்போதைய சுதந்திரமான நல்லிணக்கச் செயற்பாடுகளை பார்வையிடும் வாய்ப்பு கிட்டியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் உங்கள் சந்திப்பு மிக சிறந்தாக இருந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் கொண்டுவரப்பட்ட இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான பிரேரனை குறித்த விடயங்கள் இலங்கையில் மாத்திரமன்றி அமெரிக்காவிலும் தாக்கம் செலுத்தின.
ஐக்கிய நாடுகள் சபையினால் முன்மொழியப்பட்ட குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாராட்டுக்குரியன.
அத்தோடு குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் புதிய அரசியலமைப்பு பெரும் பக்கபலமாக அமையும் என நினைக்கிறேன்.
குறிப்பாக காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்தை அமைப்பது தொடர்பிலும் இராணுவக் கட்டுப்பாட்டிலுல்ல நிலங்களை விடுவிப்பது தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறல் உள்ளிட் விடயங்களில் கனேடிய அரசாங்கம் அனைத்து விதமான இக்கட்டான நிலைமைகளிலும் பல உதவித்திட்டங்களை வழங்கியுள்ளது.
அனைத்து மக்களும் சுமூகமாக வாழ்வத்ற்காக பொறிமுறைகளை ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது.
சிவில் யுத்திற்கு பின்னரான வடுக்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களிடத்தில் உள்ளது அதன் பிரகாரம் நல்லிணக்க பொறிமுறைகளை உருவாக்குவதில் உள்ள தடைகளை கண்டறிந்து அனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வர் வேண்டும்.
மேலும் யுத்த்தில் பாதிக்கப்பட்டவர்களின் நீண்டகால தேவைகளை கண்டறிந்து அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் அரசாங்கம் பொறுப்பாக செயற்படும் என நம்புகின்றேன்.
எதிர்காலத்தில் இலங்கை பிரதிநிதிகள் கனடா வருவர் என்று எதிர்பார்க்கின்றோம். நாமும் இலங்கைக்கான விஜயங்களை மேற்கொள்வோம். என்றார்.