பொருளாதார நெருக்கடியைக் காரணங்காட்டி
தமிழ் மக்களிடம் மீண்டும் நெருங்கும் ரணில் தரப்பு
தமிழ் மக்கள் இந்த நாட்டில் தமது உரிமைகளைக் கோரி மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அஹிம்சை – ஆயுதம் என போராட்டங்கள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் போராட்டத்தின் வீரியம் குறையாமல், யாருக்கும் அடிபணிந்து அஞ்சாமல் பல சவால்களை சந்தித்து இன்றும் வீதியோரங்களில் கொட்டகைகளை அமைத்து தமது பிள்ளைகளைத் தேடி, உறவுகளைத் தேடி காத்திருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், ஆட்சியில் இருக்கும் சிங்களத் தரப்பினர் தமிழ் மக்களை தமது தேவைக்காகப் பயன்படுத்துவதும், தமிழ் அரசியல்வாதிகளை போலியான வாக்குறுதிகளின் மூலமாக ஏமாற்றுவதும் காலங்காலமாகத் தொடர்கின்றது. விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்விடயத்தில் மாற்றங்கள் இருந்தது. அவர்கள் கூறுவதைக்கேட்டு தமிழ் அரசியல்வாதிகள் செயற்பட்டனர். ஆனால் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் இந்நிலைமைகள் மாறியுள்ளது.
நல்லாட்சியில் தமிழ் மக்களின் தேவை மைத்திரி – ரணிலுக்கு இருந்தது. தாங்கள் பதவிக்கு வர தமிழ் மக்களின், முஸ்லீம் மக்களின் வாக்குகள் தேவைப்பட்டது. தமிழ் அரசியல்வாதிகளையும் கூட்டுச்சேர்த்து செயற்பட்டனர். மஹிந்தவைப் பழிவாங்குவதாக நினைத்து, தமிழ் – முஸ்லீம் மக்களை இக்கூட்டணிகள் பழிவாங்கின. சாக்குப்போக்கெல்லாம் கூறி காலத்தையும் இழுத்தடித்து செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம் இருந்தும் செய்யாமல், வாக்குக்காக தமிழ் மக்களை ஏமாற்றியது ரணில் – மைத்திரி மாத்திரமல்ல, தமிழ் அரசியல்வாதிகளும் தான்.
அப்போதும் தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தைகள் நடாத்தத் தவறவில்லை. ஆனால் நடந்தது என்ன?. அதேபோன்றதொரு நிலைதான் இன்று மீண்டும் ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினைக் காரணங்காட்டி, மீண்டும் தமிழ் மக்களை நோக்கி வந்துள்ளார் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. நல்லாட்சியில் பிரதமராகவிருந்த அவர், இன்று ஜனாதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் மக்களது ஆணையின்றி இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம்.
சர்வதேச நாணய நிதியம் தான் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு என்று வருகின்றபோது, அது விதிக்கும் நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல ஐரோப்பிய யூனியனையும் பகைத்துக்கொள்ள முடியாது இலங்கையால். இலங்கை எதிர்பார்க்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்குக் கிடைக்க வேண்டுமாயின் அவர்களின் நிபந்தனைகளை இலங்கை கட்டாயம் ஏற்கவேண்டிய நிலை இருக்கிறது. இவ்விரு அமைப்புக்களும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கானத் தீர்வு தொடர்பில் முக்கிய விடயங்களை வலியுறுத்துகின்றன இலங்கை அரசிடம். இனப்பிரச்சினைக்கானத் தீர்வினையும், பொருளாதார நெருக்கடிக்கானத் தீர்வினையும் மேற்குலகம் ஒரேகோட்டில் பார்க்கும் நிலை இன்று வந்துள்ளது. அவர்களின் பிரதிநிதிகள் இலங்கை வருகிறபோது அரச உயர் மட்டத்திடம் தமிழ் மக்களது விடயங்கள் குறித்து கலந்துரையாடுகின்றனர். தமிழ்த் தரப்பினையும் சந்திக்கின்றனர், தமிழ்த் தரப்பும் அவர்களிடம் கோரிக்கைகளை முன்வைக்கிறது. ஆனால் இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு இனப்பிரச்சினை முக்கிய காரணம்.
எனவே இன்றைய அரசு சர்வதேச ரீதியாக எழுகின்ற சவால்களைச் சமாளிக்க உள்நாட்டில் தமிழ் மக்களுக்கான விடயங்களைச் செய்யவேண்டும் என்பது கட்டாயம். இதனை ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நன்கு உணர்ந்தவர் மஹிந்த ராஜபக்ஷவை விட. உலகில் மிகப் பெரும் செல்வந்தர்களாக இருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை வரவேண்டுமெனில் சிங்கள ஆட்சியாளர்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும். இலங்கையில் போராட்டங்கள் நடப்பதையும், பயங்கரவாதச் செயற்பாடுகளையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சுற்றுலாப் பயணிளும் விரும்பவில்லை. அதிகாரப் பரவலாக்கல், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் போன்றவைக்கான தீர்வுகளை அரசு செய்யாதுவிடின், இலங்கையானது பொருளாதார ரீதியாக மேலும் மேலும் பாதிப்படையுமே தவிர, பொருளாதார ரீதியான இலக்குகளை அடைவது கடினம். தமிழ்த் தரப்பு நல்லாட்சியில் செய்த அதே தவறை இன்று மீண்டும் செய்ய முனைந்துள்ளது. பேச்சுவார்த்தைகள் மூன்றாந் தரப்பு ஒன்றின் அனுசரணை யின்றி இடம்பெறுவது, ‘தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்குச் சமன்’. – சசிகரன்