“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் உள்ளடக்கப்படவேண்டும்.
அதேவேளை, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வுகளுடனான நிரந்தர அரசியல் தீர்வும் இந்தப் புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டும். என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில நாடாளுமன்றின் சபாநாயகர் டெல்மோலங்குலர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நேற்றுக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியதாக சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் புதிய அரசமைப்பு மற்றும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் பேசப்பட்டன என்றும் அவர் மேலும் கூறினார்.