தமிழர் தரப்பு அரசியலானது, தமிழரசுக்கட்சி தலைமையிலான அணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். – தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்த அணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை உள்ளடக்கி பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தலைமையில் மற்றுமோர் அணி என பல கூறுகளாக சிதறியிருக்கின்றன.
தமிழ் மக்களின் பலம் வாய்ந்த அரசியல் அமைப்பாக இருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதனால் பலமிழக்க நேரிட்டிருக்கின்றது.
இது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உடைவாக மட்டுமல்லாமல் முக்கியமாக தமிழ் மக்களுடைய அரசியல் பலவீனமாகவும் பலராலும் கவலையுடன் நோக்கப்படுகின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மேலும் மேலும் பலமுள்ளதோர் அரசியலமைப்பாகக் கட்டியெழுப்பி ஜனநாயக பண்புகள் நிறைந்த வழிமுறையில் செயற்படுத்துவதற்கு கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக்கட்சி மற்றும் பங்காளிக்கட்சிகளும் தவறியிருந்தன.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் தனியானதோர் அரசியல் அமைப்பாக அல்லது கட்சியாக, தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்து அதன் செயற்பாடுகளை ஒரு கட்டுக்கோப்பினுள் நெறிப்படுத்துவதற்கு, தமிழரசுக் கட்சி நாட்டம் கொள்ளவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பலம்வாய்ந்ததோர் அரசியல் கட்சியாகக் கட்டியெழுப்பப்பட்டால், பாரம்பரிய அரசியல் பெருமையுடைய தமது தமிழரசுக்கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கு இழக்க நேரிடும் என்ற அச்சமே அதற்கு முக்கிய காரணமாகும்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பின்னர், விடுதலைப்புலிகள் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கட்சியாக பொறுப்பேற்றதன் பின்னர், தமிழ் மக்கள் மத்தியில் தமிழரசுக்கட்சி செல்வாக்கு பெற்றிருந்தது.
உறங்கு நிலையில் 30 ஆண்டுகள்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அதிகாரபூர்வ தேர்தல் சின்னமாக தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டதனாலும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அதிகாரமுள்ள அந்தஸ்தை, தமிழரசுக்கட்சி வழங்கியதனாலும் மக்கள் மத்தியில் அந்தக் கட்சி மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் அறிமுகமாகியது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளை உள்ளடக்கியதாக 1974 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாக்கப்பட்டது.
உதயசூரியன் சின்னத்தைக் கொண்டதாக தேர்தல் திணைக்களத்தில் தனியொரு கட்சியாக அது பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் துரதிஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்திற்குத் தனித்துவமாக ஆனந்தசங்கரி உரிமை கோரியதையடுத்து, தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்து செயற்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதனால் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தைப் பொதுச்சின்னமாக ஏற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு விடுதலைப்புலிகள் முக்கிய பங்கேற்றிருந்தனர்.
அரசியல் கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் தலைமையை ஏற்பதற்கு, ஆனந்தசங்கரி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்தே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தை வரித்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளாகியது.
தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாக்கப்பட்ட 1974 ஆம் ஆண்டு தொடக்கம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் முதன் முறையாக 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் களம் இறங்கியது வரையிலான மூன்று தசாப்தங்கள் தமிழரசுக் கட்சி மக்கள் மத்தியில் இருந்து விலகி உறங்கு நிலையிலேயே இருந்தது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக வீட்டுச் சின்னம் பயன்படுத்தப்பட்டதையடுத்தே அந்தக் கட்சி அரசியல் அரங்கில் நீண்ட இடைவெளியின் பின்னர் பிரவேசிக்க முடிந்தது.
பங்காளிக் கட்சிகளில் தங்கியிருந்த நிலை
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை தமிழரசுக்கட்சி ஏற்றிருந்த போதிலும், 2010 ஆம் ஆண்டு வரையிலான சுமார் ஆறு வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளாகிய ஆயுதக் குழுக்களின் அரசியல் செயற்பாடுகளிலேயே தங்கியிருந்தது.
உயிராபத்து மிக்க அரசியல் நெருக்கடிகள் நிறைந்த அந்தக் காலப்பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வேட்பாளர்களைப் பெற்றுக்கொள்வது குதிரைக்கொம்பாகவே இருந்தது.
நீண்ட காலமாக மக்கள் மத்தியில் இருந்து செயலற்றிருந்த காரணத்தினால், தமிழரசுக்கட்சிக்கு வேட்பாளர்களைப் பெற்றுக் கொள்வது கடினமான காரியமாக இருந்தது.
அந்தச் செயற்பாடுகளில் அந்தக் கட்சி பங்காளிக்கட்சிகளுக்கு முழுமையான விட்டுக்கொடுப்பைச் செய்திருந்தது.
வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மட்டுமல்லாமல், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலிலும் நிலவிய ஆபத்துமிக்க நெருக்கடி நிலைமைகள் காரணமாக இத்தகைய விட்டுக்கொடுப்பான போக்கே நிலவியது எனலாம்.
அரசியல் செயற்பாடுகளில் நிலவிய உயிர் அச்சுறுத்தல் மிக்க நெருக்கடி நிலைமைகள் படிப்படியாகத் தளர்வடைந்ததையடுத்து, தமிழரசுக்கட்சி தனது கட்சிச் செல்வாக்கை அதிகரிப்பதிலும், மக்கள் மத்தியில் தன்னை வளர்த்துக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியது.
அத்தகைய கட்சி அரசியல் செயற்பாட்டின் விளைவாகவே 2012க்குப் பின்னரான காலப்பகுதியில் வேட்பாளர்களுக்கான தொகுதிப் பங்கீடுகளில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிடையே முரண்பாடுகளும், அதிருப்தியும் தலையெடுக்கத் தொடங்கியது.
அதன் உச்சகட்ட நிலைமையாகவே வரப்போகின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ். தவிர்ந்த ஏனைய பங்காளிக்கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் முறுகல் நிலை ஏற்பட்டு, டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் அதிருப்தியுடன் தொகுதிப் பங்கீட்டு கூட்டத்தில் இருந்து வெளியேற நேர்ந்திருக்கின்றது.
உணர்ச்சிகரமான ஒரு நிலையில் தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை அல்லது தமிழரசுக்கட்சியுடன் இணைந்து இனிமேல் செயற்படுவதில்லை என இந்த இரண்டு கட்சிகளும் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த போதிலும், தமது நிலைமைகளை மீள் பரிசீலனை செய்வதற்கும், தத்தமது கட்சிகளின் மத்தியகுழு மற்றும் அரசியல் குழுவில் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கும் முன்வந்திருக்கின்றன.
எனினும், அந்தக் கட்சிகளின் இறுதி முடிவு என்ன என்பது இதனை எழுதும்வரையில் வெளியாகவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மற்றுமொரு பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். தமிழ ரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதில்லை என தெரிவித்து, தமிழர்விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தைப் பொதுச் சின்னமாக ஏற்று புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியிருக்கின்றது.
இந்த நிலையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சியின் தலைமையிலான அணிக்கும், உதயசூரியன் சின்னத்தைக் கொண்ட அரசியல் அணிக்கும் இடையில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவை என்ற பெயரிலான அணியும் தேர்தலில் போட்டியிடுவதற்குக் களமிறங்கியிருக்கின்றது.
இதையும்விடதேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட தென்னிலங்கைக் கட்சிகளும், வேறு சில அரசியல் அமைப்புக்களும், சுயேச்சை குழுக்களும் இந்தத் தேர்தல் களத்தில் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கி வாக்காளர்களைக் கலங்கித் தவிக்கச் செய்யப்போகின்றார்கள்.
தேர்தல் நிலைமை இவ்வாறிருக்க, நடக்குமா நடக்காதா என்று நிச்சயமற்ற நிலையில் இருந்தபோது வெளிவந்த தேர்தல் நடைபெறுவது பற்றிய அறிவித்தல் வரும் வரையில், புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையே அரசியல் களத்தில் சூடு பிடித்திருந்தது.
தேர்தல் தயாரிப்புக்கான அரசியல் கட்சிகளின் பிரிவுகளும், கூட்டுச் சேர்வுகளும் அரசியல்வாதிகளின் கட்சித்தாவல்களும் பரபரப்பாகி, அந்த அரசியல் சூட்டைத் தணித்திருக்கின்றது.
தேர்தல் முடிந்த சூட்டோடு மீண்டும் புதிய அரசியலமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய விடயங்களும், அரசியல் தீர்வுக்கான வாதப்பிரதிவாதங்களும், அரசியல் அரங்கில் கனல் தெறிக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
அது மட்டுமல்லாமல், அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் இன்னும் தீவிரமடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் காணாமல் போனோருக்கான அலுவலக உருவாக்கம், நீதியை நிலைநிறுத்துவதற்கான பொறிமுறை உருவாக்கம், நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கான நடவடிக்கைகள் என்பனவும் தீவிரமடைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இத்தகைய ஒரு நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவும் அதனையொட்டிய பலவீனமான நிலையும், அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் சார்ந்த விடயங்களில் எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடுகள், அவை தொடர்பான கலந்துரையாடல்கள் என்பவற்றைத் தமிழர் தரப்பு எந்த வகையில் கையாளப் போகின்றது என்பது தெரியவில்லை.
நெருக்கடி நிலைமை உருவாகுமா….?
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய அரசியல் அணியை உருவாக்கியுள்ள ஈ.பி.ஆர். எல்.எவ். பாராளுமன்றத்தில் தனித்துச் செயற்படப் போவதாக அந்தக் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கூறுகின்றார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டு, அந்தக் கட்சியுடன் முரண்பட்டுக்கொண்டு பாராளுமன்றத்தில் எவ்வாறு அவர் தனித்துச் செயற்படப் போகின்றார் என்பது முக்கிய கேள்வியாக எழுந்திருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து தனியொருவராக அவர் மாத்திரம் வெளியேறுவதனால், கூட்டமைப்பின் தலைமைக்கட்சியாகிய தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றச் செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதற்கு இடமிருக்காது.
குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய இரா.சம்பந்தன் எந்தவிதமான பாதிப்புமின்றி எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்ந்து செயலாற்ற முடியும்.
ஆனால், ஏனைய இரு பங்காளிக்கட்சிகளாகிய டெலோ மற்றும் புளொட் ஆகியன தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி ஈ.பி.ஆர்.எல்.எவ். உட்பட மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் தனித்துச் செயற்பட்டால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நெருக்கடியான ஒரு நிலைமை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், அத்தகையதொரு நிலை உருவாகுமா என்பது இதனை எழுதும் வரையில் சந்தேகத்திற்கு உரியதாக இருக்கின்றது.
ஏனெனில் டெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளுமே கூட்டமைப்பில் இருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து தீர்க்கமான முடிவு எதனையும் எடுத்திருக்கவில்லை.
அதேவேளை, அந்தக்கட்சிகள் வெளியேறிச் செல்வதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் தமிழரசுக் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.
இணக்கப்பாட்டுக்கான முயற்சிகள்
குறிப்பாக தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட குழப்ப நிலைமைக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன், கூட்டமைப்பில் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தேவையான விட்டுக்கொடுப்புக்களைச் செய்து ஒரே அணியில் பயணிப்போம் என தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் இத்தகைய உத்தரவாதத்தைத் தெரிவித்து முறுகல் நிலைமைக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.
அதேநேரம் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக எத்தகைய விட்டுக்கொடுப்பையும் செய்யத்தயார் என்றும், இது தொடர்பில் தமிழரசுக்கட்சியிடம் தெரிவிப்பதாகவும் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தனும் உறுதியாகக் கூறியிருக்கின்றார்.
இருந்த போதிலும், தொகுதி பங்கீட்டு விடயத்தில் பங்காளிக்கட்சிகள் விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருப்பதன் மூலம் எத்தகைய விட்டுக்கொடுப்பை அவர் எதிர்பார்க்கின்றார் என்பது தெளிவற்றதாக உள்ளது.
விட்டுக்கொடுப்புக்களுக்குத் தயாராக இருப்பதாகத் தமிழரசுக்கட்சியினர் உறுதிப்படத் தெரிவித்துள்ள போதிலும், தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடுகளுக்கு பங்காளிக்கட்சிகள் விட்டுக்கொடுக்கத் தயராக இருக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் கூறியிருப்பதும், தமிழரசுக்கட்சி வெற்றிபெறக் கூடிய உள்ளுராட்சி சபைகளை விட்டுக்கொடுக்குமாறு பங்காளிக்கட்சிகள் பிடிவாதமாகக் கோரியிருப்பதே பிரச்சினைக்குக் காரணம் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியிருப்பதும், தொகுதிப் பங்கீட்டில் இணக்கப்பாடு சாத்தியமாகுமா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கின்றது.
இடைக்கால அறிக்கை மீதான விவாதம்
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் முதலில் இணைப்பக்குழு கூட்டத்திலும் பின்னர் பாராளுமன்ற குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் செவிசாய்க்கவில்லை.
மாறாக முதலில் பாராளுமன்ற குழு கூட்டத்திலும் பின்னர் ஒருங்கிணைப்பு குழுவிலும் அந்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆயினும் இந்தக் கூட்டங்களில்; சிவசக்தி ஆனந்தன் கலந்து கொள்ளவில்லை.
கூட்டத்தில் கலந்து கொள்ளாத கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடைக்கால அறிக்கை தொடர்பாக, அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்ட பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கருத்துரைப்பதற்கு அனுமதிப்பதில்லை என நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அந்தத் தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் சிவசக்தி ஆனந்தன் பேசுவதற்கு இராசம்பந்தன் அனுமதி மறுத்திருந்தார்.
இந்த அனுமதி மறுப்பு குறித்து சிவசக்தி ஆனந்தன் சபாநாயகரிடம் நேரடியாகவே முறையிட்டு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிய போதிலும், இடைக்கால அறிக்கைக்கு எதிராக அவர் உரையாற்றவுள்ளார் என சபாநாயகரிடமும், பிரதமரிடமும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் இரா.சம்பந்தன் எடுத்துரைத்து, தன்னை மீறி அவர்கள் நேரம் ஒதுக்குவதைத் தடுத்திருந்தார் என தெரிவிக்கப்பட்டது.
எது எப்படியானாலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை பங்காளிக்கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடு என்பன குறித்து இப்போது ஆளுநருக்கு அவசர அவசரமாகக் கருத்து வெளியிடுகின்ற தமிழரசுக்கட்சியினர் கூட்டமைப்பின் பங்காளிகட்சிகளில் ஒன்றாகிய ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயலாளரும், உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் தேசிய முக்கியத்துவம் மிக்க இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுவதற்கு விட்டுக் கொடுப்புடன் செயற்படத் தவறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு சிவசக்தி ஆனந்தன் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமையானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையையும் தலைமைக்கட்சியாகிய தமிழரசுகட்சியையும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தமைக்காக அவர் மீது பழி தீர்த்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் பலரும் கருதினார்கள்.
கடும்போக்கு வெளிப்படுமா?
இப்போது தமிழரசுக் கட்சியின் சின்னமாகிய வீட்டுச் சின்னத்தைத் துறந்து புதிதான அரசியல் அணியொன்றை அமைத்து உதய சூரியன் சின்னத்தில் தேர்தல் களத்தில் இறங்க வுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் பாராளு மன்றச் செயற்பாடுகளுக்கு தமிழரசு கட்சி இடையூறு விளைவிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குக் கிடைத் துள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கேள்விக்குறியாக்கும் வகையில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஓர் அரசியல் போக்கைக் கடைப்பிடித்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சியின் மீது தமிழரசுக்கட்சி முன்னரிலும்பார்க்க அதிக அதிருப்தியும் கோபமும் கொண்டிருக்கும் என்றே நம்பப்படுகின்றது.
அத்தகைய ஒரு நிலையில் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு அனு மதி வழங்க மறுத்ததைப்போன்று எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் சிவசக்தி ஆனந்தன் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பங்களை வழங் காமல் இடையுறுகள் விளைவிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இத்தகைய நிலைமை ஏற்படுமா என கேட் டதற்கு, அத்தகைய செயற்பாடுகளுக்கு பாரா ளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளும் பாராளுமன்றச் செயற்பாட்டு மரபுகளும் இடம ளிக்கமாட்டாது என்றே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பதிலளித்தார்.
அதேவேளை, ஜனநாயகப் பண்புகளுக்கு விரோதமான அத்தகைய நடவடிக்கைகள் இடம்பெற்றால், அது முழு பாராளுமன்றத்தினதும் ஜனநாயக நெறிமுறைகளைக் கேள்விக்கு உள்ளாக்கும் என்றும் பாராளுமன்றத்தில் அங் கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலை வர்கள் அத்தகைய ஒரு நிலைமைக்கு இடம ளிக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
எனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவு நிலைமையானது, அடு த்து வரவுள்ள அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பொறுப்பு கூறுகின்ற நடவடிக்கைகள் என்பவற்றில் தமிழரசுக் கட்சியின் இணைந்த செயற்பாட்டில் இருந்து விலகியுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி கடினமான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றே கூற வேண்டும்.
ஏனெனில் பழுத்த அரசியல்வாதியாகிய இரா.சம்பந்தனின் கடும் அரசியல் போக்கு தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயற்ப டாதவர்கள் மீது விட்டுக் கொடுப்புடன் செயற் பட இடமளிக்கமாட்டாது என்றே எண்ணத் தோன்றுகின்றது.
பி.மாணிக்கவாசகம்