தமிழ் மக்களின் உணர்வுகள் இனவாதமல்ல – சிவசக்தி ஆனந்தன் (பா.உ)

231
முதலமைச்சருக்கு எதிரான கருத்துக்கள் தனிப்பட்ட அவருக்கு மட்டுமானதன்று. அவை ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கும் எதிராகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
‘எழுகதமிழ்’ எழுச்சிப்பேரணியினால் தென்னிலங்கை அரசியல் சமூகம் கலக்கமடைந்திருப்பதாகவும், அதனாலேயே ஆட்சியாளர்களும், சிங்களபௌத்த மேலாதிக்கவாதிகளும் இனவாதக் கருத்துக்களைப் பரப்பிவருவதாகவும் இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
இலங்கைத்தீவு விடுதலை அடைவதற்கு முன்பிருந்தே தமிழ்த் தேசிய இனத்தின்மீதான அடக்குமுறைகள் தொடங்கிவிட்டதை வரலாற்றின் மூலம் புரிந்துகொள்ள முடியும். இந்த நாட்டில் முதன் முதலாகத் தோன்றிய அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து உருவாகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் பெயர்களிலிருந்தே இதனை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும்.
இந்த இரண்டு கட்சிகளின் உதயத்தின் காரணமாகவே அகில இலங்கை தமிழ்க் காங்கிரசும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தோற்றம் பெற்றமையும் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்கு தெரியும். ஆகவே, இனவாதம் முதன் முதலில் தென்னிலங்கையிலிருந்தே உருவானது. அதனை இன்றைய ஜனாதிபதியும் பிரதமரும் கூட ஏற்றுக்கொண்டுள்ளனர். அது மட்டுமன்றி, அவற்றை தாம்தான் தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்நாட்டில் தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக இருவரும் கூறிவந்தனர்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதைப் பிரதான நோககமாகக் கொண்டே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட இருப்பதாக தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடனான மைத்திரி ரணில் ஆகியோர் தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்ட வேளையில் தெரிவிக்கப்பட்டது. மைத்திரி ரணில் கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிட்டியது.
ஆனால், தமிழ் மக்களின் நீண்டகாலப்பிரச்சினையான அரசியல் தீர்வு ஒருபுறம் இருக்க, நாளாந்தப் பிரச்சினைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மைநிலை, இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளித்தல், தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய புத்த விகாரைகளைக் கட்டுவதை நிறுத்துதல், வழிபட யாருமற்ற இடங்களில் புத்தர்சிலைகளை வைப்பதைத் தவிர்த்தல், அரச அனுசரணையுடன் வலிந்து மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றங்களைக் கைவிடுதல் போன்றவற்றைக்கூட இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பது இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களைப் போன்றே செயற்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இந்நிலையில் அரசியல் தீர்வு என்பது எவ்வாறு அமையப்போகிறது என்ற பலத்த சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேற்கண்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி, இலங்கை அரசினதும், சர்வதேச சமூகத்தினதும் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக தமிழ் மக்கள் பேரவை விடுத்த வேண்டுகொளை ஏற்று வடக்கு மாகாண முதலமைச்சரின் அறைகூவலுக்கிணங்கவும் பேரவையில் அங்கம் வகிக்கும் பொது அமைப்புகள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் அழைப்பிற்கிணங்கவும், தமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்துவதற்காக தமிழ் மக்கள் பெருமளவில் ‘எழுக தமிழ்’ பேரணியில் கலந்துகொண்டனர். அதில் பங்குபற்றிய எவரும் எந்தவொரு இனத்திற்கும் எதிராக முழக்கமிடவோ, கருத்துரைக்கவோ இல்லை. தமது உரிமைகளை வலியுறுத்தியும், தமது தேவைகளை முன்வைத்தும, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிவேண்டியுமே மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் முழக்கமிட்டிருந்தனர், கருத்துரைத்திருந்தனர்
‘எழுக தமிழ்’ பேரணி சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகளுக்கும், சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிராகத் திருப்பி அதில் குளிர்காய நினைக்கும் அரசியல் சக்திகளுக்கும், பௌத்தமத அடிப்படைவாதிகளுக்கும் தமிழ் மக்களின் உரிமைக்குரல் எப்போதுமே இனவாதமாகத் தெரிவது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஆனால் நல்லாட்சி, நல்லிணக்கம், இதுவரைகாலமும் தமது கட்சிகளே இந்தப் பிரச்சினையை பூதாகரமாக்கின என்று சுயவிமர்சனம் செய்துகொள்ளும் கட்சியைச் சேர்ந்தவர்களும், பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் அடிப்படையில் செயற்படுவதாகக் கூறிக்கொள்பவர்களும் சிங்கள பௌத்த மேலாதிக்க கடும்போக்காளர்களின் தொனியில் கருத்துரைப்பதைப் பார்க்கையில், இன்னமும் இந்த நாட்டின் தென்னிலங்கை அரசியல் சமூகம் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது. அப்படியானால் நல்லிணக்கம் என்பதும் நல்லாட்சி என்பதும் வெறும் தேர்தல் மேடைப்பேச்சா என்ற கேள்வியும் எழுகின்றது.
எந்தவொரு இனத்தையோ, மதத்தையோ, சமூகத்தையோ தாக்காமல் தமது உரிமைகளை மட்டுமே வலியுறுத்தி முழக்கமிட்டு அந்த முழக்கங்கள் சார்ந்த உரைகள் இடம்பெற்ற ஒரு பேரணிக்குத் தலைமை தாங்கிய வடக்குமாகாண முதலமைச்சரைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பது எந்தவகையில் நியாயமாகும்?
பொதுபலசேனாவின் செயலாளர் தலைமையில் வவுனியாவில் திட்டமிட்டு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களை அணிதிரட்டி நடைபெற்ற ஒரு பேரணியில் தமது தரப்பு நியாயத்தை முன்வைக்க முடியாமல், வெறும் இனவாதக் கருத்துக்களை மட்டும் முன்வைத்தும் வடக்கு மாகாண முதலமைச்சரைத் தனிப்பட்டரீதியில் விமர்சித்தும் ஏட்டிக்குப் போட்டியாக ஒரு பேரணி நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பேரணி ஒரு விடயத்தைத் தெளிவாக தமிழ் மக்களுக்கும், இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றது.
இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் வந்தேறுகுடிகள் என்றும், அவர்கள் சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளின் காலடியிலேயே வாழ வேண்டும் என்றும், தாங்கள் நினைத்தபடி எதையும் செய்யும் அதிகாரம் படைத்தவர்கள் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இது குறித்து இன்றுவரை ஆட்சியாளர்களிடமிருந்தோ, தென்னிலங்கை அரசியல் சமூகத்திடமிருந்தோ எதுவிதக் கருத்துக்களும் வெளிப்படாமை எமக்குப் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
தமிழ் மக்களின் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அரச அனுசரணையுடனான திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் எதிர்காலத்தில் எம்மை எமது நிலப்பிரதேசத்திலேயே இரண்டாந்தரக் குடிகளாக மாற்றியமைப்பதற்கும், எமது இனத்தை இல்லாமற் செய்வதற்குமான நடவடிக்கையாகவே அமையும் என்று நாம் தெரிவித்துவரும் அச்சவுணர்வை மெய்ப்பிப்பதாகவே வவுனியாவில் வலிந்து குடியேற்றப்பட்டவர்களை அணிதிரட்டி அண்மையில் நடத்தப்பட்ட ஊர்வலம் அமைந்துள்ளது.
முதலமைச்சருக்கு எதிராகத் தெரிவிக்கும் கருத்துக்கள் என்பது ஒரு தனிப்பட்ட மனிதருக்கு எதிராகத் தெரிவிக்கும் கருத்துக்களல்ல என்பதையும், அது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் எதிராகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்பதையும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும், உள்ளுராட்சி அமைப்புகளில் கடமையாற்றிய உறுப்பினர்களும் இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட்ட வேட்பாளர்களும், தமிழ் மக்களின் பொது அமைப்பினரும், மனிதவுரிமைக்காகக் குரல்கொடுப்போரும் நன்கு புரிந்துகொண்டு சிங்கள பௌத்த மேலாதிக்க அடிப்படைவாதிகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க முன்வரவேண்டும். நாம் இன்று மௌனம் காத்தால் என்றுமே பேசமுடியாதவர்களாகவே இருப்போம்.
எமது உரிமைகளை வலியுறுத்தி மக்களை அணிதிரட்டியது இனவாதம் என்றால், இன்னொரு இனத்திற்கு எதிராக நடத்ப்பட்ட பேரணியை என்னவென்று அழைப்பது?
இந்த நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தையும், நல்லாட்சியையும் அமுல்படுத்த நினைப்பவர்கள் முதலில் சிங்கள பௌத்த இனவாத அடிப்படைவாதிகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். மேலும், தமிழ் மக்களுக்கு உரித்துடைய உரிமைகளை வழங்கி, அவர்களுக்கு இதுகாரும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிவழங்குவதனூடாகவே அது சாத்தியமாகும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE