போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை அரசாங்கம் வழங்குமென்று அனைவராலும் எதிர்பார்கப்பட்டது. சமஷ்டித் தீர்வு என்பதை வழங்கமாட்டார்கள் என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரியும். பல்வேறு காரணங்களைக் காட்டி தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்று அரசாங்கம் முத்திரையிட்டு தமிழினத்தின் மீது பாரிய இனப்படுகொலையை இவ்வரசு நடத்தி முடித்திருக்கின்றது.
ஏழுகட்ட சர்வதேச பேச்சுவார்த்தைகளும், பதினேழு உள்ளுர்ப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருக்கின்றன. முப்பது ஆண்டு கால போரின் பின்னரே இவ் அரசாங்கம் பேச்சுவார்த்தை மேடைக்கு வந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளுடைய அங்கீகாரத்தை விரும்பாத நாற்பத்தைந்து சர்வதேச நாடுகள் விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட முடிவெடுத்தது. தற்பொழுது போர் முடிவடைந்து ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான சமஷ்டித் தீர்வை நோக்கி போகின்ற பொழுது அதை வழங்க மறுக்கின்றது மைத்திரி அரசு இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெறுமாக இருந்தால் இதனூடாக தமிழ் மக்கள் மீண்டுமொரு ஆயுதம் ஏந்திப் போராடும் நிலமைக்குத் தள்ளப்படுவார்கள். பொறுமை காக்க வேண்டும் என்பது சம்பந்தனுடைய தாரகை மந்திரம். தமிழ் மக்களுடைய தீர்வுத் திட்டத்திற்காக அதனுடைய வியூகத்தை மாற்றியமைக்க வேண்டும். சிங்கள தேசத்தின் நயவஞ்சகத் தனமானது என்றும் தமிழ் மக்களுக்கான தீர்வை எட்டித் தரப்போவதில்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும்.