தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடாத்துவது இணக்க அரசியல் அல்ல. டக்ளஸ் தேவானந்தா நடாத்தியது தான் இணக்க அரசியல். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசு தவறினால் நாட்டில் நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார்.
தந்தை செல்வா சமூக அபிவிருத்தி மன்றத்தின் அனுசரணையில் நடைபெற்ற மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அபிவிருத்தி தொடர்பான எந்த சேவையினைச் செய்வதாக இருந்தாலும் மக்கள் அனைவருக்கும் தெரியக் கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்தினால் மட்டுமே எமது பணிகள் தொடர வாய்ப்புக்கள் உண்டு.
எனினும் அபிவிருத்தி தொடர்பில் சேவைகளை செய்ய வேண்டும் என்றால் சிலர் தான் முன்னுக்கு வருவார்கள். அதனால் கிடைக்கும் பயன் குறைவாக இருக்கும். அதனைவிடுத்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எல்லோரும் முன்வரவேண்டும்.
ஆட்சி மாற்றத்திற்கு முன்பு இங்கு சேவையாற்றிவரும் அத்தனை சமூக சேவை நிலையங்களும் நேரடியாக புலனாய்வாளர்களாலும், பாதுகாப்பு அமைச்சின் நேரடி கண்காணிப்பிலும் இருந்து வந்தன. இதனால் பலர் செய்த சேவைகளை நிறுத்தி விட்டனர். அந்தளவுக்கு அழுத்தங்கள் வழங்கப்பட்டன.
மௌனிக்கப்பட்ட போரின் பின்னர் வடக்கு கிழக்கில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க முன் வந்த ஒரு நிறுவனத்தினைக் கூட கடந்த அரசு ஆலோசனை வழங்கக் கூடாது என அழுத்தங்களை பிரயோகித்தது.
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கூட கடந்த அரசு கொடூரமாக நடந்துள்ளது. அதே அரசு இன்று இருந்திருந்தால் கூட மூக்கு கண்ணாடி வழங்குவதற்கும் காரணம் கூறியிருக்க வேண்டும். ஆனாலும் இன்று சுதந்திரம் வந்ததாக நான் கூறவில்லை.
ஏனெனில் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் முன்னர் இராணுவம் தலையிட்டது இப்போது பொலிஸார் தலையிடுகின்றனர். இதனை நாம் தெரியப்படுத்த வேண்டிய அனைத்து தரப்பிற்கும் தெரியப்படுத்தி விட்டோம்.
முன்னைய அரசு நேரடியாக எங்களைத் தாக்கியது . ஆனால் இந்த அரசு தோளில் கைபோட்டு எங்கே கொண்டுபோய் தள்ளி விட போகின்றார்கள் என்று தெரியவில்லை.
மேலும் நாம் மூன்று முக்கிய கட்டத்தில் நிற்கின்றோம். ஆரம்பம் 30 வருடம் சாத்வீகப் போராட்டத்தினை முன்னெடுத்தோம். அவர்கள் எங்களை 1956ம் ஆண்டுகளில் அடித்தார்கள், கொன்றார்கள் .
ஆனாலும் ஐ.தே.க வைச் சேர்ந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன தனது அங்கீகாரத்துடன் தமிழர்களை 1983ல் நேரடியாக தாக்கி கொலையும் செய்தார்.
அதில் இருந்து தான் இவ்வாறான சம்பவங்கள் ஓரளவு வெளிச்சத்திற்கு வந்தன. அந்தவேளை நாங்கள் உசார் ஆகி அடுத்த 30 வருடங்கள் ஆயுதப் போராட்டத்தால் பல விடயங்களை சாதித்தோம். ஆனால் இடை நடுவில் சில நாடுகள் துரோகம் செய்துவிட்டார்கள்.
தமிழ் இனத்துக்குரிய தனித்துவத்துடன் இரண்டாந்தரப் பிரஜைகளாக இல்லாது இந்த நாட்டில் இருப்பதனை உறுதிப்படுத்தாது இந்த போராட்டத்தை மழுங்கடித்து விட்டனர். இன்று இராஜதந்திர முறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுபவத்தைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
கடந்த ஜனாதிபதியை தமிழர்கள் நீக்கினார்கள். அதற்கான பிரதி உபகாரமாக விடயங்கள் நடைபெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் அவை மிக மந்தமாக நடைபெறுகின்றன.
வலி.வடக்கில் 6340ற்கும் மேற்பட்ட ஏக்கர் மக்களது நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் 1000 ஏக்கர் விடப்பட்டுள்ளது. எனினும் அவை துண்டுகளாக வழங்கப்பட்டுள்ளன.
மக்களது நிலங்களை இராணுவம் வைத்துக் கொண்டு வெறும் தரைகளையே மக்களுக்கு கொடுக்கின்றார்கள்.
அரசு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனீவாவுக்கு ஏதோ ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளே இவை.
ஜெனீவா மற்றும் உலக நாடுகள் பேரினவாதமாக தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் அரசுகள் தமிழர்களை ஏமாற்றும் என்று நன்கு அறிந்து வைத்துள்ளனர். தற்போது அவர்களும் உசாராகவே உள்ளனர்.
ஆனால் தமிழர்கள் அரசின் மந்திரி பதவிகளில் இருந்து கொண்டு தமிழர் பிரதேசங்களுக்கு உதவிகளை வழங்குவதாக கூறி பிரதமரை அழைத்து வந்து எதிர்வரும் தேர்தலுக்கு வாக்கு கேட்கின்றனர். இது பிரதமரின் குள்ள நரிப்புத்தியை காட்டுகின்றது.
தமிழ் மக்கள் அதிகளவில் அடிபட்டதும் இழந்ததும் ஐ.தே. காலத்தில் தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நூல் நிலையம் எரிக்கப்பட்டது, 1983ம் ஆண்டு வரலாறு, முன்னர் பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்பட்டது என அவர்களது காலத்திலேயே தான். எனினும் இன்று வந்து கண்ணீர் விடுவது போல காட்டுகின்றனர்.
19வது திருத்தம் தொடர்பில் விவாதம் நாடாளுமன்றத்திற்கு வரவுள்ளது. வாக்கெடுப்பில் வெற்றிபெற்றால் தான் மாகாண சபை அதிகாரம் ஓரளவுக்கு எமக்கு கிடைக்கும். இருப்பினும் 18வது திருத்தத்தை வைத்திருந்தால் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை தாம் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நிலைப்பாட்டில் வரும் அரசுகள் உள்ளனர்.
நாம் இந்த நாட்டுக்கு சுதந்திரத்தை போராடிப் பெறவில்லை தமிழர்கள் வாதாடிப் பெற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளினாலும் வஞ்சிக்கப்பட்டோம்.
எந்தக் கட்டத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரிடமும் மண்டியிடாது.
நாங்கள் இணக்க அரசியல் பேசுவதற்காக போகவில்லை. சிறையில் வாடும் எமது பிள்ளைகளை உடனடியாக பொது மன்னிப்பில் வெளியில் எடுக்க வேண்டும். வலி.வடக்கில் இருக்கும் 30 ஆயிரம் குடும்பங்கள் அவர்களது சொந்த நிலத்தில் குடியமர்த்தப்பட வேண்டும். காணாமல் போனவர்கள் தொடர்பில் முடிவு காண வேண்டும் என்பதனைக் கருதியே நாம் அரசுடன் செயற்பட்டு வருகின்றோம்.
இதனைப் பலர் தவறாக சித்தரிக்க முயல்கின்றனர். எவரும் அதற்கு எடுபட்டுவிடக் கூடாது. இணக்க அரசியல் செய்வது என்றால் நாம் மந்திரிப்பதவியை எடுத்திருக்க வேண்டும். அவர்களது சொகுசு வாகனங்களைப் பெற்றிருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடாத்துவது இணக்க அரசியல் அல்ல.
டக்ளஸ் தேவானந்தா நடாத்தியது தான் இணக்க அரசியல்.
மேலும் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவில்லை என ஜெனீவா அரசை வலியுறுத்தி வருகின்றது. இந்தநிலையில் சந்திரிக்கா அம்மையார் தலைமையில் நல்லிணக்கம் தொடர்பில் ஏற்பாடு ஒன்றினை ஏற்படுத்தி சாயம் பூச அரசு முயற்சிக்கின்றது.
எனினும் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை நல்லிணக்கம் இந்த நாட்டில் ஏற்படுத்த முடியாது.
மக்கள் காணிகளை இழந்து வீதிகளில் நிற்கின்றனர். சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள் விடுவிக்கப்படவில்லை. காணாமல் போனவர்கள் குறித்து எதுவித பதிலும் கூறாது இருக்கும் இந்த அரசு எந்த அம்மையார் தலைமையில் நல்லிணக்கத்திற்கு ஒரு தலைமை அமைத்தாலும் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.