வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளை நிறுவுதல் தொடர்பில் வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருக்கும் கருத்து பௌத்த மேலாதிக்க சிந்தனையின் மோசமான வெளிப்பாடு’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
எனினும், தமிழ்மக்கள் தங்கள் அபிலாஷைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என பரிசீலிப்பது தவிர்க்க முடியாது ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் பெருமளவான பங்களிப்பை செய்துள்ளன.
எனவே தமிழ் மக்களின் தயவில் உருவான அரசாங்கத்தின் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வடக்கு முதலமைச்சர் முட்டாள்… என்ற தொனியில் வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு தமிழ் மக்களும் முட்டாள்கள் என்பதாகவே அமையும்.
பொறுப்பற்ற விதத்தில் இனவாதியாக தன்னை அடையாளப்படுத்தி அவர் விடுத்துள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.
இத்தகைய இனவாதிகளின் தவறான வழிநடத்தல்களால்தான் இன்று இந்த நாடு பாரிய அழிவுகளையும், உயிரழப்புகளையும் சந்தித்து, நீதி கோரி அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் சனத்தொகையில் 70 வீதத்தினர் பௌத்தர்கள் என ரஞ்சன் ராமநாயக்க, தெரிவிப்பதன் மூலமும் இரணைமடு தமிழர்களுக்கு சொந்தமில்லை என கூறுவதன் மூலமும் தமிழர்கள் அடிமைகள் என சொல்லவருகிறாரா?
நல்லாட்சி அரசாங்கத்தில் இருப்பவர்கள், தமிழர் மனங்களை வென்று தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சகிப்புத்தன்மையுடன் உழைக்கவேண்டும்.
அதனை விடுத்து இத்தகைய இனவாத கருத்துக்களை வெளியிட்டு மீண்டும் நாட்டை அழிவு நிலைக்குக் கொண்டுச் செல்லக்கூடாது என செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, தமிழர்களை தொடர்ந்து அவமதித்தும் அடிமைப்படுத்தியும் கொண்டிருக்கும் நிலை தொடர்ந்தால் அவர்களும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்’ என செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.