தமிழ் மக்கள் பேரவையின் தலைமையிலிருந்து விலகேன் – விக்னேஸ்வரன் 

218
தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டிருப்பதையடுத்து உருவாகியுள்ள சர்ச்சைக்கு முடிவைக் காணும் வகையில் வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான விஷேட அமர்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இதில், மாகாண சபை உறுப்பினர்களான ஆர்னோர்ட், பரஞ்சோதி, அஸ்மின், சுகிர்தன், சயந்தன் ஆகியோர், பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து விக்னேஸ்வரன் விலக வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தினார்கள்.

இங்கு உரையாற்றிய ஆர்னோல்ட், வடமாகாண முதலமைச்சராக நாம்தான் உங்களைப் பதவிக்குக் கொண்டு வந்தோம். எம்மால்தான் நீங்கள் முதலமைச்சராகினீர்கள். அதனை மற்றவர்கள் தமது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

நாம் உங்கள் தலைமையின் கீழ் பல விடயங்களை முன்னேற்றங்களை கொண்டு செல்வோம். பத்திரிகை ஒன்றில் நாம் உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப் போவதாக வெளியானது தவறான செய்தி.

ஆனால், நீங்கள் தமிழ் மக்கள் பேரவையிலிருந்து விலக வேண்டும். எங்களுடன்தான் நீங்கள் இருக்க வேண்டும்” என வலியுறுத்த, மற்றொரு மாகாண சபை உறுப்பினரான பரஞ்சோதியும் முதலமைச்சரை பேரவையின் இணைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “எமது தலைமை எம்முடன் கலந்து பேசாமல் தான் முடிவெடுகின்றார்கள். எமது கரிசனையை நாம் வெளிப்படுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தங்களுடைய தீர்வு யோசனையை முன்வைக்கலாம். தமிழர் கரிசனையை அரசுக்கு காட்டுவதாக இது அமையும்.

எம் எல்லோருடைய கோரிக்கையும் 2013ம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனப்படி அமைவதால் அனைவரும் அதனையே சொல்கிறோம் என்பதை காட்ட முடியும். அதேவேளையில், பேரவையிலிருந்து விலகும் அவசியம் எனக்கில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்த வேளையில் குறுக்கிட்ட பரஞ்சோதி, “நீங்கள் பேரவையிலிருந்து வெளியேற வேண்டும்” என மீண்டும் வலியுறுத்தினார். முதலமைச்சர் மீண்டும், “வெளியே வரும் அவசியம் எனக்கு இல்லை” என்றார்.

Wigneswaran-4

SHARE