தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சி அல்ல எனவும், மாற்றுத் தலைமையை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமும் அல்ல எனவும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும் போருக்குப் பின்னரான தமிழ் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான ஒரு உறுதியான செயற்றிட்ட முன்னெடுப்பே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் குறித்து அமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களின் அபிலாசைகளை, அவர்களின் வாழ்வியலுக்கான உரிமைகளை, சுயநிர்ணயத்தின் பண்புகளை தாராளமாகக் கொடுப்பதாக இருத்தல் வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகையதொரு நிலைமையில், தனிமனிதர்களின் தீர்மானங்களை, ஒரு சில அரசியல்வாதிகளின் கருத்துகளை நிரந்தர தீர்வாக்கிக் கொள்வது அர்த்தமற்றது என தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காத்திரமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழுகின்ற தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற தீர்வுகளே தேவை எனவும், எனினும் இத்தகைய தீர்வை வழங்குவதில் இதுவரை காலமும் ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும் முன்வரவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் பொதுமுடிவை எடுப்பதில் அரசியல் என்ற எல்லையை கடந்து ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்யக்கூடியதான அமைப்பு தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற எல்லைகளுடன் மட்டும் தனது பணியை மட்டுப்படுத்தாமல் தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்தல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டில் கரிசனை கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளையும் முன்னெடுக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.