தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு. களத்தில் குதித்தார் சுமந்திரன்

178

தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு கோவைகள் சட்டமா அதிபரிடமிருந்து வரவில்லையாம் செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்தி வைப்பு

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளை மீறினார் என குற்றம் சுமத்தி தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு செவ்வாயன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இரண்டாவது தடவையாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை 6 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான அனைத்து வழக்குகளினதும் கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அவருடைய பணிப்புரைக்கு அமைய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கோவைகள் இன்னும் அங்கிருந்து திரும்பி வராத காரணத்தினால் இந்த வழக்கை வேறு ஒரு திகதிக்கு ஒத்தி வைக்குமாறு அரச சட்டத்தரணி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தயா மாஸ்டர் சார்பில் முன்னிலையாவதற்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். இந்த வழக்கு குறித்து அவர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

பயங்கவரவாதம் மற்றும் குறிப்பிட்ட பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு எதிரான நட்ட நடவடிக்கைகள் என தெரிவித்து, கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள விதிமுகைளில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பிலான இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டபோதே, அவைகள் மனித உரிமைக்கு மாறானது, சாதாரண நீதிக்கு விரோதமானது என தெரிவித்து பல அமைப்புக்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் பலத்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
சில படங்களை பிரசுரிப்பது பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது சட்டத்தரணிகள் கூட தொடர்பு கொள்வது போன்ற செயற்பாடுகள் குற்றச் செயல்களாக அந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

ஐநா நிபுணர்குழுவினரும்கூட, இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது என தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது அவற்றை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பரவலாகக் குரல் எழுப்பப்பட்டிருந்தது. ஆயினும் இந்த விதிமுறைகளைப் பயன்படுத்தி வழக்கு தாக்கல் செய்யமாட்டோம் என அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும், விசேடமாக ஊடகங்களுக்கும் அப்போதைய அரசு உறுதியளித்திருந்தது.

ஆயினும் இத்தகைய விதிமுறைகளின் கீழ் இந்த வழக்கில் தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு சட்ட வலு அற்றது என முதல் நிலையில் நீதிமன்றத்தில் முன் வைத்து வாதிடுவதற்காகவே இன்று நீதிமன்றத்தில் நான் ஆஜராகியிருந்தேன்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை மீளப்பெற்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அத்துடன் புதிதாக வழக்குகள் பதிவு செய்தவற்கு எதிராக நாங்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்திருக்கின்றோம்.

இந்த நிலையில், விசேடமாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இல்லாத குற்றம் ஒன்றை செய்ததாக 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட விதிகளின் முதல் முறையாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பது, இதைப்பாவிக்கமாட்டோம் என வாக்குறுதியளித்துவிட்டு, அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளுக்கும், பொதுவான எல்லா நீதி விதிமுறைகளுக்கும் முரணானது அது சட்ட வலு அற்றது என்ற ஆட்சேபணையை நாங்கள் எழுப்புகிறோம்.

இது முற்று முழுதும் சட்ட வலு அற்ற ஒரு குற்றச்சாட்டு, ஆகவே இந்தக் குற்றப்பத்திரிகை வலு அற்றது என்ற சட்டரீதியான ஆட்சேபணையை விசேடமாக எழுப்புவதற்காகவே நான் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கின்றேன்.

ஆனால் அரச சட்டத்தரணி கால அவகாசம் கேட்டதனால் இந்த வழக்கு விசாரணை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்படியான அடிப்படையான சட்ட ஆட்சேபணையை நான் எழுப்புகிறேன் என திறந்த நீதிமன்றத்தில் நான் தெரிவித்துள்ளேன் என்றார் சட்டத்தரணி சுமந்திரன்.ma

SHARE