கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவம் குறித்து சாட்சியமளிப்பதற்கான இறுதி தினத்தை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் நியமித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம் திகதி முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு கொழும்பு விசேட மேல் நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேரா இன்று உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்வதற்காக கொழும்பு – பித்தல சந்தியில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தத் தாக்குதலை நடத்திய குண்டுதாரிக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஐவரரும் இன்றைய விசாரணையின்போது மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியாக சாட்சியமளிக்கவே கோட்டாபாய ராஜபக்சவுக்கு இன்றைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பாணை கடந்த மாதம் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றிருப்பதால் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு அவர் முன்னிலையாகத் தவறியிருப்பதால் எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம் திகதியன்று முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு மேல் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.