தற்போதைய ஆட்சிக் காலத்திலும் இனங்களுக்கிடையிலான சமாதான நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மாத்திரமே- வடமாகாணக் கல்வியமைச்சர் த. குருகுலராஜா

259

தமிழ் மக்களின் குடியிருப்புக்களில் இராணுவம் குடியிருக்கும் நிலையில் சமாதானம், நல்லிணக்கம் என்பது ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்ற பழ மொழியை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ள வட மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தற்போதைய ஆட்சிக் காலத்திலும் இனங்களுக்கிடையிலான சமாதான நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மாத்திரமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட சமாதானத்திற்கு,நீதிக்குமான பணியகம்,மற்றும் வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் கலாசார விளையாட்டுத் துறை அமைச்சின் ஏற்பாட்டில் “சமாதானத்திற்காய்  ஒன்றிணைவோம்”  எனும் தொனிப்பொருளிலான சர்வதேச சமாதான தினம் நேற்றுப் புதன்கிழமை(21-09-2016) பிற்பகல்-02.30 மணியளவில் யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரியில் யாழ். மாவட்டச் சமாதானத்திற்கும்,நீதிக்குமான பணியகத்தின் தலைவர் சோ.சிவரூபன் தலைமையில் இடம்பெற்றது.
எதிர்கால மாணவர்கள் சமூதாயத்தினரிடையே நிலையானதொரு சமாதானத்தை  ஏற்படுத்தும் வகையிலும், சமாதானம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சமூக ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தும் புரிந்துணர்வின் அடிப்படையிலும் இந்த சர்வதேச சமாதான தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
போராளிகளைப் புதைத்த நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது. போராளிகளின் சமாதிகளைத் தரைமட்டமாக்கி அதன் மேல் இராணுவ முகாம்களை அமைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் சமாதானம் எங்கே வரும்?
உலகத்திலே நடைபெறுகின்ற பல போர்களை ஐக்கிய நாடுகள் சபையினராலும் தடுத்து நிறுத்த முடியாமலிருக்கிறது. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாகவுள்ள பான் கீமூனும் எங்களுடைய நாட்டிற்கு வருகை தந்து சென்றிருக்கிறார்.சமாதானம் தொடர்பில் எங்களுடன் பேசினார்.  சமாதானம் குறித்தான உறுதிமொழியை எங்களிடம் தந்து சென்றிருக்கிறார். முள்ளி வாய்க்காலில் போர் நடைபெற்று முடிவடைந்ததன் பின்னர் முதன் முதலாக அங்கு சென்று பார்வையிட்டார். ஆனால். இந்த வருடம் அவர் இலங்கைக்கு வருகை தந்த போது முள்ளிவாய்க்கால் சென்று பார்வையிடவில்லை என்றார்.
இந்த நிகழ்வில் மாணவர்களின் கலை,கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டதுடன், நாட்டின் இனங்களுக்கிடையிலான ஐக்கியம் எனும் கருப்பொருளிலான பேச்சுக்களும் மாணவர்களினால் நிகழ்த்தப்பட்டன.
unnamed-1-copy-100 unnamed-2-copy-75 unnamed-3-copy-70 unnamed-copy-88
SHARE