பாகிஸ்தானில் தலிபான்களில் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வசிக்கும் விளையாட்டு வீராங்கனை ஒருவர் தனது லட்சியத்தை அடைவதற்காக ஆண் போல் வேடம் அணிந்து வசித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள நகரம் தென் வாசிர்தான். ஆப்கானிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள இந்நகரம் உலகளவில் மிகவும் ஆபத்தான இடங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. மேலும் தலிபான் தீவிரவாதிகளின் கோட்டையாகவும் இப்பகுதி திகழ்கிறது. அங்கு பெண்கள் வீட்டை விட்டு வெளியில் செல்வது என்பதே மிகவும் சிரமமான ஒன்று. இந்நிலையில் தலிபான்களில் கட்டுப்பாட்டில் பெண்கள் அடையும் துன்பங்கள் தொடர்பாகவும் தனது இளமை வாழ்க்கை தொடர்பாகவும் அந்நாட்டின் புகழ் பெற்ற மரியா துர்பாக்கை என்ற பெண் விளையாட்டு வீராங்கனை புத்தகம் எழுதியுள்ளார். விளையாட்டு வீராங்கனை ஆகவேண்டும் என்பதற்காக 4 வயதிலேயே ஆண்களை போன்று உடையணிந்து ஆணை போலவே வலம் வந்ததாக மரியா தெரிவித்துள்ளார். மேலும், மரியாவுக்கு பக்க பலமாக அவரது தந்தை இருந்துள்ளார். மரியாவின் பெயரை சென்ஜிஸ்கான் என்றும் மாற்றினார். முதலில் பளு தூக்கும் வீரராக திகழ்ந்த மரியா, காலப்போக்கில் ஸ்குவாஷ் விளையாட்டின் மீது தனது சிந்தனையை செலுத்தினார். இந்நிலையில் தீவிர மனஅழுத்தம் காரணமாக தான் பெண் என்ற உண்மையை வெளியுலகுக்கு தெரியப்படுத்தினார். இதனால் தனது எதிர்காலம் வீணாய் போகும் என்றும் அவர் நினைத்துள்ளார். எனினும் அவர் தொடர்ந்து போட்டிகளில் கலந்துகொள்ள அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் பாகிஸ்தானின் சிறந்த ஸ்குவாஷ் வீராங்கனை மரியா இருந்து வருகிறார். மேலும் உலக அளவில் சிறந்த வீராங்கனைக்கான 46வது இடத்தில் அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |