தலைவர் பிரபாகரன் எனக்கூறும் அதிகாரம் கஜேந்திரகுமார் அவர்களுக்கு உரித்தானது சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அல்ல

311

 

இன்றைய அரசியல் நிலைமைகள் கரையான் புத்துக்கட்ட பாம்பு குடிகொண்ட கதைபோன்று மாற்றம் பெற்றுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்திற்கான காரணத்தைப் பார்க்கின்றபோது, மிக முக்கியமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியலில் ஆசனம் வழங்காமையே காரணமாகும். இது தமிழரசுக்கட்சி செய்த மிகப்பிரதான தவறுகளில் ஒன்று. நீண்டகாலமாக பாராளுமன்றில் அங்கம் வகித்த சுரேஸ் அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக சிறந்து விளங்கினார். இவர் கூட்டமைப்பிலிருந்த காலத்தில் இவ்வாறான ஒரு புரட்சியை உருவாக்க முயற்சிக்கவில்லை. கூட்டமைப்பைப் பதிவுசெய்யும் விடயத்தில் அக்கறை செலுத்தினார்.

rwrsj5712

அதற்காக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. கூட்டமைப்பைவிட்டு வெளியேறவோ அல்லது எதிராக சதிசெய்வதையோ அவர் வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை. பாராளுமன்றில் அனுபவம்மிக்க இவரை ஏற்றுக்கொள்ளாது சாந்தி அவர்களுக்கு ஆசனம் வழங்கியமையானது ஒரு நகைப்புக்குரிய விடயமாகப்பார்க்கப்படுகின்றது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தின்படி, கட்சியிலுள்ள ஏனையவர்கள் வெற்றிபெற அக்கட்சியின் தலைவர் தோல்வியடைவாராகவிருந்தால் அவரை மக்கள் நிராகரித்தார்கள் என்றே கருதவேண்டும் அல்லது அக்கட்சியிலுள்ளவர்கள் அவருக்கான ஆசனத்தை பகிர்ந்தளித்திருக்கவேண்டும். இவ்வாறான நிலைப்பாடே அவருக்குள் இருந்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என சுரேஸ் அவர்கள் திட்டங்களைத் தீட்டினார். அதனது வெளிப்பாடாகவே தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம், எழுக தமிழ் பேரணியின் எழுச்சி எனத் தொடர்கின்றது.

mahinda-suresh-premachandran

இந்நிகழ்வின்போது உரையாற்றிய சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தலைவர் பிரபாகரன் பொங்குதமிழை அன்று நடாத்தியிருந்தார். இன்று தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழை நடாத்தியிருக்கிறது என்று பிரபாகரனின் பெயரை உச்சரித்தவுடன் மக்கள் தமது கோஷங்களை எழுப்பினர். இது தேசியத்தலைவர் மீது மக்கள் கொண்டுள்ள பற்றினையே வெளிப்படுத்துகிறது. இதில் முக்கிய விடயம் என்னவெனில் சுரேஸ் பிரேமச்சந்திரனது தலைவர் பிரபாகரன் அவர்கள் அல்ல, பத்மநாபா அவர்களே. விடுதலைப்புலிகளது தலைவர் பிரபாகரன் பொங்குதமிழை நடாத்தினார். இதில் பத்மநாபா அவர்களை இழிவுபடுத்தும் நோக்கிலேயே இப்பேரணியில் செயற்பட்டிருக்கின்றார். இவருக்கு இன்னொரு பெயர் மண்டையன் குழுவின் தலைவர் என்பதாகும். இதனது வரலாறு மிக நீண்டது. அக்காலத்தில் செய்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இந்நிகழ்விற்கு ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் போன்ற கட்சிகளுக்கு அழைப்புவிடுத்த தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய சூத்திரதாரியான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று சிந்திக்கவேண்டும்.

maamanithar-kumaar-ponnampalam4

அவர் அரசியலில் வளர்ந்துவந்த பாதை என்ன? தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என மேடைகளில் பேசி அக்கொள்கையின் படி நடப்பவர். தலைவர் பிரபாகரன் எனக்கூறும் அதிகாரம் கஜேந்திரகுமார் அவர்களுக்கு உரித்தானது. தனது சுயநல அரசியல் தேவைக்காக புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்களையும், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரைனையும் பகடைக்காயாக பயன்படுத்த நினைப்பதன் செயற்பாடு இன்று அவரது அரசியலுக்கு பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாதை தவறு என சுரேஸ் அவர்கள் தமி;ழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்த காலத்திலேயே அவதூறாகப் பேசியவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் அவர்கள். ஆயுதக்குழுக்களை சரமாரியாக விமர்சித்து கொலைக்காரர் எனக்கூறியவர். இன்று எந்த முகத்துடன் இவர்களை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு போலி அமைப்பிற்கு உறுதுணையாகச் செயற்படுத்த இணைத்துக்கொண்டார்.

north-sri-lankan-chief-minister-c-v-wigneswaran-and-itak-leader-r-sampanthan

அவரது நோக்கம் தமிழரசுக் கட்சி எம்மையும் இணைத்துக்கொண்டு 03ஆசனங்கள் வழங்கவேண்டும். அந்த ஒப்பந்தத்திற்கு தமிழரசுகட்சி இணங்கிச் செயற்படாததன் காரணத்தால் தனது வழி தனி வழி என செயற்பட ஆரம்பித்தவர் கஜேந்திரகுமார் அவர்கள். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சொற்பதமே இங்கு சரியாக அமைந்தது. சுரேஸ் அவர்களைக்கொண்டு தனது அரசியலை நடாத்தலாம் என திட்டம் தீட்டிய கஜேந்திரகுமார், கஜேந்திரகுமாரைக்கொண்டு அரசியல் செய்யலாம் என எண்ணிய சுரேசும், இவர்கள் இருவரையும் வைத்து தனது அரசியலை பலப்படுத்தலாம் என நினைத்த முதல்வர் விக்னேஸ்வரனும் இதற்கு மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தியதே பரிதாபத்துக்குரிய விடயம். இவர்களது தனிப்பட்ட அரசியலுக்கு இந்த மக்கள் துணைபோய் நிற்கிறார்கள். இவர்களது சுயலாப அரசியல் இதனை வெளிப்படுத்தி நிற்பதை அவதானிக்க முடிகிறது. முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் ஆயுதக் கட்சியுடன் இணைந்துசெயற்பட நான் தயாராகவில்லை என யாழில் தெரிவித்திருந்தார். தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள தமிழ் மக்கள் பேரவை என்ற முத்திரையுடன் செயற்படுகின்றார். யார் மீதும் உள்ள தனிப்பட்ட விரோதத்தினால் நாம் இதனை எழுதவில்லை. இதன் ஊடாக மக்கள் தெளிவடையவேண்டும். அரசியல்வாதிகள் மக்களோடு பின்னணிப்பிணைந்தவர்கள். பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் விலைபோய்விடக்கூடாது. ஒரு மக்கள் எழுச்சியை ஊடகம் தடுத்து நிறுத்துவதாகவிருந்தால் அது தவறு. சுயநல அரசியலுக்காக கஜேந்திரகுமார், சித்தார்த்தன், டக்ளஸ் எழுக தமிழ் பேரணியில் ஒரு அங்கமாக இருந்து நடாத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாது. கட்சி பேதங்கள் எதுவுமின்றி தமிழ் மக்களின் எழுச்சி என கூறிய நிலையில் ஜனநாயகப் பேராளிகள், சிறிரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி இதைவிடவும் பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. அப்படியாகப்பார்த்தாலும் இவர்களில் ஒருவருக்கும் முன்னுரிமை வழங்கப்படவில்லை. ரெலோ இயக்கம் இதில் இரட்டைவேடம் புரிந்திருந்தது.

14457412_1050070828425559_8071221803089034761_n-768x576-1

தனது சகாக்களில் ஒருவரான அமைச்சர் டெனீஸ்வரனை அனுப்பிவிட்டு மேடையில் பேசக்கூடாது என செல்வம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். ஏனையவர்களை செல்லக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். இது அவர் பாராளுமன்ற பதவியையும், தமிழரசுக்கட்சிக்கு சவால்விடும் நிலையை எடுத்துக்காட்டுகின்றது. கூட்டமைப்பமை நேர்த்தியாக பதிவு செய்யவேண்டிய விடயத்தில் செல்வம் அவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதே சுரேசின் நேரடிக்குற்றச்சாட்டு. அவ்வாறு பதிவுசெய்திருந்தால் நிலைமைகள் மாற்றமடைந்திருக்கும். அதிகாரப்போட்டியின் மறுவடிவம் என்று கூட எழுக தமிழ் பேரணியைக் குறிப்பிடலாம். மக்களின் வாழ்க்கையில் தமது அரசியலை நடாத்த எழுந்த பேரணியை நினைத்து அழுவதா? சிரிப்பதா? எனத்தெரியவில்லை. இந்தப்பேரணியை கஜேந்திரகுமார் அவர்கள் தனித்து நடாத்தியிருந்தால் இதனைவிட பன்மடங்கு ஆதரவு கிடைத்திருக்கும். கஜேந்திரகுமார் அவர்களின் கட்சியைக் குறைகூற முடியாதிருந்திருக்கும்.

kajendrakumar-ponnambalam

அரசியலுக்காக மாமனிதருடைய மகன், ஒரு சட்டத்தரணி, பழைய அமைச்சருடைய பேரன், காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் என அதற்கான ஒரு வரலாறு இருக்கிறது இவருக்கு சுரேசையும், சித்தார்த்தனையும் விட்டால் அரசியல் செய்ய முடியாதா? இந்தக் கேள்வியை பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான் அவர்கள் எழுப்பியிருந்தார். இதற்கு பதில் வழங்குவாரா? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்பதும் கேள்விதான். இதிலிருந்து இவரது சுயலாப அரசியலும் விளங்குகின்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மீது மக்கள் வைத்திருந்த சொற்ப நம்பிக்கையையும் இல்லாதொhழிக்கும் செயற்பாடே இதுவாகும். பொங்குதமிழை நடாத்தியவர்களையும் பங்குபற்றியவர்களையும் இலங்கை இராணுவத்திற்கு காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள்தான் இந்த ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் கட்சிகள். இதில் புளொட் கட்சி தீவிரமாகச் செயற்பட்டது. இவ்வரலாறுகளை கஜேந்திரகுமார் அவர்கள் தெரிந்துவைத்திருந்தும் அவர் இந்த எழுக தமிழ் எழுச்சியில் நடந்துகொண்ட முறையானது ஆக்கபூர்வமானதல்ல. இதில் கலந்துகொண்ட மக்கள் தமது எழுச்சியை வெளிப்படுத்தினர். அதற்கு நாம் மதிப்பளிக்கவேண்டும். தமிழரசுக் கட்சியையும் இணைத்துக்கொண்டு இந்தபேரணி நடத்தப்பட்டிருக்குமாகவிருந்தால் அது தமிழினத்திற்குக் கிடைத்த பாரிய வெற்றியாக கருதப்பட்டிருக்கும். தென்னிலங்கை பாரியதொரு அரசியல் நெருக்கடியைச் சந்தித்திருக்கும். உண்மையில் வடக்கில் தமிழ்க் கட்சிகளுக்கு குழப்பவாதியாக சுரேசும், தெற்கில் அரசிற்கு குழப்பவாதியாக மஹிந்தவும் செயற்படுவதுபோன்ற உணர்வு வெளிப்படுகின்றது. சுரேஸ் அவர்கள் மஹிந்தவுடைய செயலாளராக செயற்பட்ட வரலாறும் உண்டு. முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களும் தமிழ்த்தேசியத்தை விற்றுப்பிழைக்கும் நிகழ்ச்சிநிரலுக்குள் சென்றுகொண்டிருக்கிறார். தன்னை ஆன்மீகவாதியாக முன்னிலைப்படுத்திக்கொண்டு மறுபக்கத்தில் ஹிட்லர் போல செயற்பட எத்தனிக்கிறார். த.தே.கூட்டமைப்பே இவரை முதல்வர் வேட்பாளராக கொண்டுவந்து வெற்றிபெற வைத்தது. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் செயற்பாட்டை இவர் நிகழ்த்தியிருக்கிறார். முதல்வர் விக்னேஸ்வரன் யார்? இவரது அடுத்தகட்ட செயற்பாடுகள் என்ன? த.தே.கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதில் இவரது பங்கு என்ன? இவருக்கும் சுரேசுக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன? தமிழரசுக்கட்சி மற்றும் த.தே.கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதனால் இவர்களுக்குக் கிடைக்கும் இலாபம் என்ன?

தொடரும்…

– இரணியன் –

SHARE