தாகத்தால் தவித்தேன்… செத்துப் பிழைத்தேன்… வீராங்கனையின் கண்ணீர் கதை

534

இந்தியா போன்றதொரு மக்கள் நிறைந்த தேசத்தில் இருந்து, சர்வதேச அளவிலான ஒலிம்பிக் போட்டிகளில் இரு பதக்கங்கள் தான் வெல்ல முடிகிறது. அதற்கு ஒருபுறம் பெருமைப் பட்டுக்கொண்டே, விளையாட்டுகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் இல்லை போன்றவற்றை தொடர்ந்து பேசுகிறோம். இனி, நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் பேசுவோம் என்பது வேறு.

ஆனால், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்காவது ஏதேனும் உதவியை இந்திய ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் பிஸினெஸ் கிளாஸில் செல்ல, தங்களுக்கு விமானத்தில் எக்கனாமிக் கிளாஸ் தான் கொடுக்கப்பட்டது என ஒலிம்பிக் ஆரம்பித்த போதே ,ஒரு வீரர் சொல்ல பிரச்னைகளுக்கான பிள்ளையார்சுழி போடப்பட்டது.

இந்தியாவில் இருந்து ரியோவிற்கு, தத்து சந்த் செல்ல எடுத்துக்கொண்ட நேரம் ஒன்றரை நாள். “வீரர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு சலுகையை தான் வழங்குவீர்கள் என்றால், என்ன மாதிரியான வெற்றிகளை எதிர்ப்பார்க்கிறீர்கள் ?” என வெளிப்படையாகவே கேட்டார் தத்து

ஜிம்னாஸ்டிக் போட்டிகளில், இந்தியாவின் பெயர் கூட இதுவரை வெளியே வந்ததில்லை. ஆனால், அவற்றைக் கடந்து ஃபைனலுக்கு முன்னேறி, நான்காம் இடமும் பெற்று அசத்தினார் தீபா கர்மகர். ஆனால், தீபா கர்மகர், அவரது பிஸியோதரபிஸ்ட்டை உடன் அழைத்துச் செல்ல , அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தியாவிற்காக சாக்ஷி மலிக் வெண்கலப் பதக்கம் வென்ற அதே நாள், வினேஷ் போகட்டும் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்றார். சீன வீராங்கனையுடன் விளையாடிய போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவ உதவி செய்யக்கூட , இந்தியா ஒரு தேர்ந்த விளையாட்டு மருத்துவரை ரியோவிற்கு அனுப்பிவைக்கவில்லை. இந்தியாவின் சார்பாக ரியாவுக்கு சென்றது ரேடியாலஜிஸ்ட் மட்டும் தான் . வினேஷ் போகட் தன் ட்விட்டர் தளத்தில், ” உடல் ரீதியாக மட்டும் அல்ல, மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் ” என தெரிவித்தார்.

இந்தப் பட்டியலில், மாராத்தான் ஓடிய ஜெய்ஷாவும் இணைந்து இருக்கிறார். கடந்த ஆண்டு பீஜிங்கில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில், 2:34.43 நேரத்தில் கடந்தவர், இந்த முறை 2:47:19 நேரம் எடுத்துக்கொண்டார்.

மாராத்தான் என்பது 42.195 கிமீ. ஒவ்வொரு இரண்டரை கிலோமீட்டருக்கும் இடையே ஒவ்வொரு நாட்டின் சார்பாக வீரர்களுக்காக தண்ணீர் குளுக்கோஸ், மருந்துகள், துடைக்கும் துண்டு போன்றவை இருக்கும். மருத்துவர்களும் உடன் இருப்பார்கள். ஆனால், இந்தியாவின் சார்பாக அங்கு இருந்த அரங்குகள் காலியாக மட்டுமே இருந்தன.

இதுபற்றி ஜெய்ஷா குறிப்பிடும் போது, ” எப்படி குறிப்பிட்ட இலக்கை கடந்து முடித்தேன் என எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு 8 கிலோமீட்டருக்கும் ஒருமுறை ஒலிம்பிக் குழு சார்பாக கொடுக்கப்பட்ட துண்டும், தண்ணீரும் மட்டுமே எங்களுக்கு கிடைத்தது.அவை 500மீட்டருக்குக் கூட போதுமானதாக இல்லை. அந்த வெப்பத்தில் 30 கிலோமீட்டருக்கு மேல், ஓடும் நம்பிக்கை முற்றிலுமாக இழந்து இருந்தேன்.

பிற நாட்டு வீரர்களுக்கு , க்ளுகோஸ், தேன் போன்றவற்றை தொடர்ந்து வழங்கினார்கள். எனக்கும், கவிதாவிற்கும், தருவதற்குக் கூட அங்கு ஒரு நபர் இல்லை. இரு நாட்களுக்குப் பின்,எனது உடல்நிலை நன்றாக இருப்பதாக தோன்றியது. ஆனால், இப்போது மிகவும் பலவீனமாக உணர்கிறேன். குறைந்தது மூன்று மாதமாவது ஆயுர்வேத சிகிச்சை எடுத்தால் தான் , நான் பழைய நிலைக்கு வர முடியும். இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை ” என கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் எதிர்பார்ப்பதற்கு முன்னர், அவர்களுக்கு குறைந்த பட்ச நம்பிக்கையையாவது, ஒலிம்பிக் சங்கங்கள் தருவது அவசியம், அடுத்த முறையாவது , வீரர்களுக்கு வழங்குவோம் என நம்பவோம்.pelajr

SHARE