தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிப்பது தொடர்பாக பாரீஸில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 3,200 நபர்கள் பங்கேற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த நவம்பர் மாதம் பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 130 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்காலத்தில் தாக்குதல் நிகழ்ந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிப்பது தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடத்த பாரீஸ் மாநகராட்சி கவுன்சிலிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பாரீஸ் நகர் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இரண்டு மணி நேரம் நடந்த இந்த முகாமில் 3,200 நபர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த சிறப்பு முகாம் குறித்து அரசு அதிகாரி ஒருவர் பேசியபோது ‘தாக்குதல் நேரத்தில் மட்டுமின்றி அவசரக்காலங்களில் முதலுதவி அளிப்பது எப்படி என அனைவருக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. தாக்குதல் நிகழும் தருணங்களில் மயக்கமடையும் அல்லது காயமுற்ற நபர்களுக்கு எப்படி உடனடியாக முதலுதவி அளிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பலனுள்ள இந்த சிறப்பு முகாம்களை இனி ஒவ்வொரு வருடமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என அந்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து, எதிர்காலத்திலும் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் முதலுதவி முகாம்களை நடத்துவது மிகவும் அவசியமானது என பாரீஸ் தீயணைப்பு துறையினரும் பிரான்ஸ் செஞ்சிலுவை சங்கமும் முன் வைத்த கோரிக்கையை தொடர்ந்து இந்த முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. |