தாக்குதல், அச்சுறுத்தல் காரணமாக ஏனைய மாகாணங்களில் இருந்தும் வைத்தியர்கள் மன்னார் வர தயக்கம் காட்டுகின்றனர்

139
-மன்னார் நகர் நிருபர்-
வைத்தியர்கள் மீதான தாக்குதல் மற்றும் அச்சுரூத்தல் போன்ற சம்பவங்களின் காரணமாக தென் பகுதியில் இருந்தும் ஏனைய மாகாணங்களில் இருந்தும் வைத்தியர்கள் மன்னார் வைத்தியசாலைக்கு கடமையாற்ற  வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த  வைத்திய அதிகாரியையும், பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் மீதும் இன்று (6) வியாழக்கிழமை காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது வைத்தியசாலைக்குச் சென்ற வடக்கு சுகாதார அமைச்சர் வைத்தியர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று   புதன் கிழமை(5) இரவு கர்ப்பிணி தாய் ஒருவர்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அறுவைச்சிகிச்சை மூலம் குறித்த தாய் குழந்தையை பிரசவித்துள்ளார்.எனினும் குறித்த குழந்தை  மருத்துவ காரணங்களினால் இறந்துள்ளது.
குறித்த குழந்தையின் இறப்பு தொடர்பான விடையங்கள் ஆராயப்பட்டு வருகின்றது.
எனினும்  (6) வியாழக்கிழமை காலை குறித்த தாயை பார்க்க வந்த அவருடைய கணவரும், உறவினர் ஒருவரும் பிரசவ விடுதியில் உள்ள வைத்திய அதிகாரியையும், பாதுகாப்பு உத்தியோகத்தரையும் தாக்கியுள்ளனர்.இதனால் இங்கு ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலையின் அனைத்து மருத்துவ உத்தியோகஸ்தர்களும் தங்களுடைய தாய்ச்சங்கத்திற்கு இவ்விடையம் தொடர்பாக அறிவித்து அவர்களுடைய ஆலோசனைக்கு அமைவாக 24 மணி நேர பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை(6) காலை 8 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை(7) காலை 8 மணிவரை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுடைய மேலதிக நடவடிக்கைகளுக்காக தாய்ச்சங்கத்தின் ஆலோசனைக்காக காத்திருக்கின்றார்கள். குறித்த சம்பவம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
இங்கே நடை பெற்ற விடையங்களுக்கு காரணங்கள் எதுவாக இருந்தாலும் கடமை நேரத்தில் ஒரு வைத்தியர்,பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆகியோர் மீதான தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டிய விடையம்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்களினால் எனக்கு பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றது.
நோயாளர்களை பார்வையிட வருகின்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுவதாகவும்,பார்வையாளர்கள் வைத்தியர்களுக்கு இடையிலான தொடர்பாடல்களின் குறைபாடுகள் காணப்படுவதாகவும் இதனால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் தொடர்பில் வைத்திய அத்தியட்சகருக்கு அலோசனைகள் வழங்கியுள்ளோம்.
பார்வையாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
ஒரு நோயளரை அதிகலவான பார்வையாளர்கள் கூடி நின்று பார்வையிடுவதினால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதோடு,   நோய் தொற்றுக்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானது.
தற்போது வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பையும், அதிகலவான பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் ஒரு வைத்தியசாலையின் உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பிற்காக வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிப்பது ஒரு வைத்தியசாலையின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தக்கூடியது.
எனவே குறித்த பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் மேற்கொள்ளும்.எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான சம்பவங்களின் காரணமாக தென் பகுதியில் இருந்தும் ஏனைய மாகாணங்களில் இருந்தும் வைத்தியர்கள் இங்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.எனவே சுகாதார அமைச்சர் என்ற வகையில் குறித்த சம்பவத்தை வண்மையாக கண்டிக்கின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE