
ஹவ்லொக்ஸ் ரகர் அணியின் தலைவரும் தேசிய ரகர் விளையாட்டு வீரருமான வசீம் தாஜூடீனின் வாகனம் மதில் சுவரில் மோதுண்டு தீப்பற்றிக்கொள்ளவில்லை என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோதுண்ட காரணத்தினால் உலோகப் பகுதிகள் தீப்பற்றி எரியவில்லை என இலங்கை மோட்டார் போக்குவரத்துச்சபையின் உதவி தொழில்நுட்ப பிரிவு ஆணையாளர் ஜே.ஏ.எஸ்.ஜயவீர கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.மோட்டார் கார் எவ்வாறு தீப்பற்றிக்கொண்டது எவ்வாறு தீ பரவிக் கொண்டது என்பது குறித்து நிச்சயமான காரணிகளை கூற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு வசீம் தாஜூடீன் வாகன விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவரது மரணத்தில் சந்தேகம் நிலவியதாகத் தெரிவித்து நடத்தப்பட்டு வரும் புதிய விசாரணைகளில் இந்த மரணம் கொலை என்பது உறுதியாகியுள்ளது.கே.க்யூ. 6543 என்ன இலக்கத்தையுடைய டொயொட்டா ரக வாகனமே எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தது
கடந்த ஆகஸ்ட் மாதம் நீதவானினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய குறித்த வாகனத்தை தொழில்நுட்ப நிபுணர்கள் சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.
இலங்கை டொயொட்டா நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் டபிள்யூ.எல். பெரேரா, மேலதிக அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலியங்க மற்றும் உதவி அரச இரசாயன பகுப்பாய்வாளர் டபிள்யூ.எம்.எல். ஜயமான்ன ஆகியோர் வாகனத்தை பரீட்சித்து விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
வாகனம் மோதுண்டு உலோகப் பகுதிகள் மற்றும் வாகன சில்லுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களின் அடிப்படையில் சாரதி இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவருக்கு பெரியளவு பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
உயிராபத்து தோற்றுவிக்கும் அளவிற்கு இந்த விபத்து பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்காது என தெரிவித்துள்ளனர். இதேவேளை, உடல் பாகங்களில் சில பகுதிகள் காணாமல் போனதனைப் போன்றே வாகனத்தின் சில முக்கிய பாகங்களும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது