தாடி வளர்த்தவர்கள் குற்றவாளிகள்! யாழ்.பொலிஸாரின் புதிய கண்டுபிடிப்பு

320

தாடி வளர்த்தவர்கள் குற்றவாளிகள் என புதிய விளக்கம் கொடுக்கும் பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு முறைப்பாடும் பதிவு செய்யாமல் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் யாழ்.குடாநாட்டில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளானவர் வடமாகாண எதிர்க்கட்சி தலைவரின் மகன்.

குறித்த இளைஞர்களை கைது செய்த மானிப்பாய் பொலிஸாரினாலேயே இச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவினால் நேற்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற  சிவில் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:­

என்னுடைய மகனும், அவருடைய நண்பன் ஒருவரும் நேற்று முன்தினம் மானிப்பாய் பகுதிக்குச் பஸ்சில் சென்றிருந்தனர்.

பஸ்சில் இருந்து இறங்கிய அவர்கள் இருவரையும் இடைமறித்த மானிப்பாய் பொலிஸார் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன் போது தன்னுடைய மகனிடம் ஆள் அடையாள அட்டை இருந்தது. நண்பனிடம் ஆள் அடையாள அட்டை இருந்திருக்கவில்லை.

இதனால் இருவரையும் கைது செய்த பொலிஸார் பொலிஸ்நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர்.

நண்பகல் 12 மணியளவில் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார் அங்கு வைத்து இருவரையும் தாக்கியுள்ளனர்.

நீண்ட நேரமான இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார் மாலை 5 மணியளவில் என்னைத் தொடர்பு கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் உங்கள் மகனையும், அவருடன் வந்த மற்றுமொறுவரையும் கைது செய்துள்ளோம், நாளை காலை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறும் சிங்கள மொழியில் தெரிவித்திருந்தார்.

நான் உடனடியாகவே பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இருவரையும் பார்வையிட்டேன். அப்போது மகனின் நண்பனின் தலை வீங்கிக் காணப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கேள்வி கேட்டேன்.

அப்போது அந்த பொலிஸ் அதிகாரி எவருமே அவர்களை தாக்கவில்லை என்று செல்லியது மட்டுமல்லாமல், இருவரும் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திரிந்தார்கள் அதனாலேயே அவர்களை கைது செய்ய நேரிட்டது என்றார்.

சந்தேகப்படும் படியாக இருவரும் என்ன செயற்பாட்டினை செய்தார்கள் என்று நான் அவரிடம் வினவிய போது, அவர்கள் தாடி வளர்த்திருந்தார்கள், இதனால் அவர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகம் கொண்டோம் என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்திருந்தார்.

எந்தவிதமான முறைப்பாடும் பதிவு செய்யப்படாம் இருவரையும் தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு தெரிவித்திருந்தேன்.

இதன் பின்னரும் நடைபெற்ற நீண்ட இழுபறிக்குப் பின்னர் இரவு 8 மணியளவில் பொலிஸார் இருவரையும் விடுதித்திருந்தனர்.

இச் சம்பவத்தினை உறுதிப்படுத்தும் தாக்குதலுக்கு உள்ளான இளைஞரும் அக்கூட்டத்திற்கு வருகைதந்திருந்ததுடன், கந்தசஸ்டி விதரம் காரணமாகவே தாடி வளர்த்திருந்ததாக அவர் தெரிவித்ததுடன், தன்மீது தாக்குதல் மேற்கொண்ட மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினை அடையாளம் காட்டியிருந்தார்.

அக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இச்சம்பவத்தினை ஒப்புக் கொள்வது போலும், மறுப்பது போன்றும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

மேலும் சிங்கள மொழியினை பேசக்கூடியதாகவும், வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காரணத்தினால் சிரமப்பட்டு எந்தக் காரணங்களும் இல்லாமல் கைது செய்யப்பட்டவர்களை என்னால் மீட்க முடிந்தது.

இதுவே ஒரு சாதாரண பொது மகனுக்க நடைபெறப்பிருந்தால் பொலிஸாருடைய நடவடிக்கை எவ்வாறு அமைந்திருக்கும்?

எனவே பொலிஸாருடைய பொறுப்பற்ற தன்மை தொடர்பாக உரிய சட்ட நவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் உரிய முறைப்பாடு பதிவு செய்யப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, அக் கூட்டத்தில் குறித்த விடையம் தொடர்பாக பேசியவை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

SHARE