தாயகம், தேசியம், சுய ஆட்சி என்ற கோஷங்கள் இனங்களுக்கு இடையில் ஒருபோதும் நல்லிணக்கத்தை கொண்டு வரப்போவதில்லை. – ஆசிரியர் த.சிவசோதி

235

தாயகம், தேசியம், சுய ஆட்சி என்ற கோஷங்கள் இனங்களுக்கு இடையில் ஒருபோதும் நல்லிணக்கத்தை கொண்டு வரப்போவதில்லை. ஓர் நாடாக அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஆசிரியர் த.சிவசோதி தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று காலை நடைபெற்று வருகின்றது. குறித்த அமர்வில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

தாயகம், தேசியம், சுயாட்சி என்ற கோஷங்கள் இனங்களுக்கு இடையில் ஒரு போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. இது அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு மட்டுமே பொருத்தமானது.

இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் கிராம இராச்சியங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற வேண்டும். குற்றவாளிகள் யார் என கண்டறியப்பட்ட வேண்டும் எனினும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இரு தரப்பிலும் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகளை இனங்கான ஒரு பொறிமுறை விசாரணை அவசியம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் சரியான முறையில் வழங்கப்பட வேண்டும்.

ஆனாலும் அதில் கூட பாரபட்சம் தற்போது காட்டப்பட்டு வருகின்றது. வீதிகளில் உள்ள போக்குவரத்து பொலிஸார் கூட தமிழர் பகுதிகளில் சிங்களத்தில் பேசி பணம் பறிக்கின்றார்கள். இவர்கள் சிங்களத்தில் ஏதோ பேசுகிறார்கள். அவை தமிழ் மக்களுக்கு புரிவதில்லை.

எமது பகுதிகளில் தமிழ் பொலிஸாரைக் கூட குறைந்தபட்சம் நியமிக்காத போது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது கேள்விக்குறியாகவே காணப்படும் எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதே வேளை பிரதமரால் நியமிக்கப்பட்ட இந்த நல்லிணக்க பொறிமுறை தொடர்பான அமர்வில் தமது கருத்துக்களை பதிவு செய்ய 100 பேருக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

அதன்படி இன்றைய அமர்வில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள், காணாமல் போனோரின் உறவுகள் உட்பட பலரும் கலந்து கொண்டு தமது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90

SHARE