தாய்லாந்தில் உள்ள தி தம் லுஅங் என்ற குகையில் சிக்கி மீட்கப்பட்ட 3 அகதி சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசனை செய்து வருகிறார்.
கனமழையினால் கால்பந்தாட்ட சிறுவர்கள் 12 பேர் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் என மொத்தம் 13 பேர் குகைக்குள் சிக்கிகொண்டனர்.
சுமார் 18 நாள்கள் போராட்டத்துக்கு பிறகு அனைவரும் மீட்கப்பட்டனர். குகையில் சிக்கியவர்களின் நான்கு பேருக்கு தாய்லாந்தின் குடியுரிமை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சிறுவர்கள் போர்ன்சாய் கம்லுஆங், அதுல் சாம், மாங்கோல் பூன்பியன் மற்றும் பயிற்சியாளர் எக்போல் சாண்டவாங் ஆகியோர் வடக்கு தாய்லாந்து பகுதி மற்றும் மியான்மர்- தாய்லாந்து எல்லை பகுதியில் இருந்தவர்கள். அவர்களுக்கென சொந்த நகரம் கிடையாது.
குடியுரிமை இல்லாதவர்களுக்கு தாய்லாந்து அரசு ஒரு அடையாள அட்டை வழங்கும். இத்தனை நாள்களாக இந்த மூன்று சிறுவர்களும் அதைத் தான் பயன்படுத்தி வந்துள்ளனர். அடையாள அட்டையின் மூலம் சில சலுகைகள் மட்டுமே பெற முடியும்.
ஆனால் பயிற்சியாளருக்கு எந்தவித சட்டப்பூர்வமான அனுமதியும் இல்லை இவரால் எந்த பொது சலுகைகளையும் கூட பெற முடியாது.
தாய்லாந்து சட்டத்தின் படி இவர்கள் குடியுரிமை பெற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
இந்நிலையில், தாய்லாந்து உள்துறை அமைச்சகம் இந்த நால்வருக்கும் குடியுரிமை வழங்க ஆலோசனை செய்து வருவதாக, அந்நாட்டு பதிவுச் செயலகத்தின் இயக்குநர் வீனஸ் சர்சுக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், தற்போது சிறுவர்களின் பிறந்த சான்றிதழ், மற்ற ஆவணங்கள், எந்த வகையில் அவர்களுக்கு தாய்லாந்து சொந்த நாடு போன்ற விசயங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
அனைத்தும் சரிபார்த்த பிறகு சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். அனைத்து அரசு முறை நடவடிக்கைகளும் முடிந்த பிறகு 6 மாதத்துக்கும் குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.