திட்டமிட்ட மண் பறிப்பை தடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு தமிழக புத்திஜீவிகள் அறைகூவல்

295

perani

கடந்த 2008-2009 காலப்பகுதியில் தமிழீழ மக்கள் மீது சிங்கள மகிந்த ராஐபக்சே அரசாங்கம் இன அழிப்புப் போரின்போது ‘போரை’ நிறுத்து என்ற ஒற்றை முழக்கத்தோடு தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் உயர் நீதிமன்ற வளாகத்திலே நீண்ட போராட்டம் நடத்திக் கடும்அடக்கு முறைக்கு ஆளான சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவன் என்ற உரிமையோடு ‘எழுக தமிழ்’ பேரணிக்கு உங்களை அழைக்கின்றேன். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் இனஅழிப்பை சந்தித்துள்ள நம் தமிழினம் ஈழத்திலும் தமிழகத்திலும் அனைத்துலக அரங்கிலும் நீதிக்காக போராடிவருகிறது.

தமிழ்மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் நோக்கோடு காலத்தின் தேவைகருதி ஈழத்தின் யாழ்மண்ணிலே 24-09-2016 அன்று இடம்பெறவுள்ள சர்வதேசத்தின் நீதிக்கான கதவுகளை அகலத்திறப்பதற்கான வரலாயுற்று சிறப்புமிக்க எழுக தமிழ் பேரணியின் அவசியத்தை புரிந்துகொண்டு ஈழத்தில் உள்ள அனைத்து உறவுகளும் வீதிக்கு வந்து உங்களின் ஐனநாயகரீதியான கடமையையினை ஆற்ற வேண்டும் என்பதை உங்களில் ஒருவனாக உரிமையுடன் அழைக்கின்றேன்.

மாறிவரும் உலக ஒழுங்கிலே சிறுபாண்மைச் சமூகங்கள் தமது உரிமைகளை பாதுகாப்பதற்கு ஐனநாயகவிழுமியங்களிற்கு உட்பட்டு அறவழியில் போராடுவதே ஒரேவழி 2009 முள்ளிவாய்க்கால் மண்ணிலே மகிந்த ராஐபக்ச அரசானது தமிழர் களின் ஆயுதபலத்தை சர்வதேச போர்விதிமுறைகளையும் யுத்ததர்மத்தையும் மீறி இரும்புக்கரம் கொண்டு அழித்தபோதிலும் தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய வரலாற்றுப் பொறுப்பிலிருந்து தமிழர்கள் விலயிருக்க முற்பட்டால் உரிமைப்போரிலே தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகளினதும் போரின்போது படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான பொதுமக்களிற்கும் செய்யும் வரலாற்றுத் துரோகமாக அமைந்துவிடும்.

காலத்தின் தேவைகருதி சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினர்களையும் ஒருங்கிணைத்து ஈழமண்ணிலே உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையானது தோற்றம்பெற்று ஒரு மாதகாலத்திற்குள் தமிழ் மக்களிற்கான தீர்வுத்திட்டத்தை வெளியிட்டபோது ஈழத் தமிழர்களால் மட்டுமன்றி தமிழக மக்களாகிய நாங்களும் தமிழ் மக்கள் பேரவையின் கடந்தகால நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து வந்தோம்.

விடுதலைப் புலிகளின் காலத்திலே உறக்கத்திலிருந்த இலங்கை அரசாங்கத்தின் நில ஆக்கிரமிப்பு கொள்கை யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் தீவிரம் பெற்றுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிகின்றோம் நிலஆக்கிரமிப்பை இலகுபடுத்தும் விதமாகவே தமிழர் பிரதேசங்களிலே புத்தவிகாரைகளை அமைப்பதில் அரசாங்கம் ஆர்வம் காட்டிவருகிறது. பாதுகாப்பை பலப்படுத்துதல் என்ற போர்வையிலே தமிழர் நிலங் களை அபகரித்து படைகளின் உதவியுடன் சிங்களக் குடியேற்றங்களை தீவிரப்ப டுத்தி வருவதோடு தமிழ்-முஸ்லீம் சமூகங்களிற்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத் தக்கூடிய புதிய குடியேற்றங்களிற்கும் அனுமதியளித்து சிறுபாண்மை சமூகங்களிற் கிடையில் மோதல்களை உருவாக்கி வருவதாக அறியமுடிகிறது.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னரும் இலங்கை அரசானது நல்லாட்சி என்ற வேடமணிந்து தமிழர்களிற்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புப்போரை சத்தமின்றி முன் னெடுத்து வருவதை ஈழத்தில் வாழும் அனைத்து சொந்தங்களும் புரிந்துகொண்டு அரசாங்கத்தின் நீதிக்குப்புறம்பான அனைத்து நடவடிக்கை களையும் சர்வதேசத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் இருக்கின்ற உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் தமிழ் மக்கள் பேரவையினால் ஒருங்கிணைக் கப்படும் எழுக தமிழ் பேரணியிலே கலந்து கொள்ளுமாறு சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கத்தின் சார்பிலே ஈழத்தில் வாழும் அனைத்து குருதி உறவுகளிடமும் நாம் அழைப்பினை விடுக்கின்றோம்.

இதேவேளை ‘எழுக தமிழ்’ பேரணியில் பங்கேற்று மண்பறிப்பை தடுப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் வரலாற்றுக் கடமை என பேராசிரியர் ஓவியர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழினம் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு துன்பங்களை துயரங்களை இழப்புகளை சந்தித்து வருகின்றது.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கிடைக்கவில்லை என்பதோடு இருந்ததையும் இழந்தோம் எஞ்சி இருப்பதையும் தவணைமுறையில் இழந்து கொண்டிருக்கிறோம். இலட்சக்கணக்கான மக்களை இழந்தோம், ஆயிரக்கணக்கான போராளிகளை இழந்தோம், கணக்கிட முடியாத சொத்துகளை உடைமைகளை இழந்தோம், உயிராக நேசித்த மண்ணையும் இழந்தோம்.

தமிழர்களிடம் இன்னும் எஞ்சி இருக்கின்ற அனைத்தையும் பறிப்பதற்கு, கேட்பதற்கு யாரும் இல்லை என்ற துணிவில் சிங்கள பௌத்த மேலாதிக்கம் திட்டமிட்டு செயல்படுகின்றது. திட்டமிட்ட இன அழிப்பைச் செய்த சிங்கள பௌத்த மேலாதிக்கம் தமிழ் மண்ணை பறிக்கின்ற வேலைகளையும் திட்டமிட்டுச் செய்கிறது. தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகளை நிறுவுவதும், அதன் மூலம் தமிழ் மண்ணைப் பறித்து சிங்களக் குடியேற்றங்களை செய்து தமிழின அடையாளத்தை அழித்து சிங்களமயப் படுத்துகின்ற வேலையைத் தொடர்ந்து செய்கின்றது.

உலகின் தொன்மையான ஒரு இனம், எஞ்சி இருக்கின்ற மண்ணையும் இழந்துவிட்டு எந்த உரிமையையும் கேட்க முடியாது. அதனால் மண்பறிப்பை தடுப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் வரலாற்றுக் கடமை.

அந்தக் கடமையை நிறைவேற்றும் விதமாக, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் நடவடிக்கையை அம்பலப்படுத்தி, உரிமையை நிலைநாட்ட உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செப்பம்பர் 24,2016 அன்று யாழ் நகரில் தமிழ் மக்கள் பேரவை முன்னேடுக்கும் மாபெரும் பேரணியில் தமிழர்கள் அனைவரும் அணிதிரண்டு ஒருமித்து ஒன்றுபட்டு பங்கேற்குமாறு வேண்டுகிறேன்.

SHARE