தியாகி திலீபன் அவர்களின் நினைவுதினமான இன்று (26.09.2016) நல்லூரில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத்தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, த.தே.கூட்டமைப்பைப் பிரித்தாள நினைப்பது என்பது விடுதலைப்புலிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் செயற்பாடாகவே அமைகின்றது. புலிகளின் பலம் பொருந்திய கட்சியாக த.தே.கூட்டமைப்பு திகழ்கிறது. அதனைப் பிளவுபடுத்த இன்று பல கட்சிகள் முயற்சிக்கின்றன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என்றும் தியாகி திலீபனுடைய தியாகம் என்பது தமிழினத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.
தியாகி திலீபனின் நினைவு தினத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டமையானது விடுதலைப் புலிகளுடைய போராட்டத்தையும், அதனது கட்டமைப்பையும், தியாகங்களையும் மதிப்பளிக்கும் ஒரு செயல்வடிவமாகவே பார்க்கமுடிகின்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் நல்லூரில் தியாகி திலீபனை நினைவு கூர்ந்துள்ளோம். தொடர்ந்தும் எமது ஜனநாயக நடவடிக்கைகள் திறம்பட நகர்த்தப்படவேண்டும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பிளவுபடுத்த நினைப்பது விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்துவதாகவே அமையும். இன்று தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் திலீபனின் தியாகத்தை மதித்து இங்கு வருகை தந்து திலீபனின் நினைவை அனுஷ்டித்தது வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்டார்.