தியானம் மனதிற்கு மட்டுமல்ல உடல்ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது, தியானம் செய்து வரும்போது நமக்குள் மட்டுமல்ல, நம் அருகில் உள்ளவர்களுக்கும் இதன் அலைகள் பரவத் தொடங்கும்.
அமரும் நிலை
தியானத்திற்கு முக்கியமானது அமரும்நிலை. எந்த நிலையில் வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம்.
ஆனால் அடிக்கடி அசையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நாற்காலியிலோ அல்லது தரையிலோ அமர்ந்து கொள்ளலாம்.
எந்த இடம் நமக்கு உட்கார வசதியாக உள்ளதோ அங்கு அமர்ந்து கொள்ளலாம். ஆரம்ப காலங்களில் சற்று அமைதியான இடம் தேடிஅமர்வது நல்லது.
வசதியாக அமர்ந்தபின் இரண்டு கைகளை சேர்த்து வைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக் கொள்ளுங்கள்.
உடலையும், மனதையும் இறுக்கமின்றித் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தர் அமர்ந்திருக்கும் முறைப்படி அமருவோமானால் நமக்குள் ஒரு சக்தி வளையம் உருவாவதை நம்மால் உணர முடியும்.
உடலின் ஆரவாரங்கள் மெல்ல அடங்கும் வேளையில் உள்ளுணர்வு தன் அடுத்த நிலை நோக்கி செல்ல ஆரம்பிக்கும்.
மூச்சு கவனித்தல்
மனம் என்பது நம் எண்ணங்களை சேகரித்து வைத்திருக்கும் ஒரு அறை அவ்வளவுதான்.
நமது எண்ணங்களை சேகரித்து வைத்து அதில் உள்ள ஏதாவது எண்ணத்தை பற்றி நமக்கு அவ்வப்போது எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருப்பதுதான் மனதின் வேலை.
மூளையில் உள்ள நினைவாற்றலை சேமித்து வைத்து அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொள்வது போல மனமும் நம் எண்ணங்களை எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருக்கும், நம் அனுமதியின்றி.
மனதின் இந்த நிலையைக் கடந்து செல்ல வேண்டும் என்றால் நாம் நமது மூச்சுக் காற்றினை கவனிக்க வேண்டும்.
நமது ஆன்மாவின் இயல்பான குணம் கவனித்தல், ஆகவே நாமும் மூச்சை கவனிக்கத் தேவையாய் இருக்கிறது.
மேலும் மூச்சிற்கும் உயிருக்கும் இடையே ஒருஆழ்ந்த தொடர்பு உள்ளது. ஆகவே மூச்சை கவனிப்பதன் மூலம் நம் உயிரும் கவனம் பெறுகிறது.
இந்த மூச்சை கவனிக்கும் பயிற்சியை நாம் ஒரு உடற்பயிற்சி போல செய்யக் கூடாது. மூச்சு உள்ளே வருவதும் போவதும், அதன் இயல்பிலேயே இருக்க வேண்டியது அவசியம். வெறுமனே சுவாசத்தின் பாதையை கவனித்தால் மட்டுமே போதுமானது.
அமைதியாக அமர்ந்து மூச்சை கவனிக்கும் நேரத்தில் பல வித எண்ணங்கள் நம்மை நோக்கி வரும். ஆனாலும் அதனைப் புறக்கணித்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மூச்சில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
மூச்சை கவனிக்க கவனிக்க எண்ணங்கள் குறைவதுடன் மூச்சு விடுதலும் சீராகக் குறைந்து (உள்ளிழுக்கும் நீளம் குறைந்து )புருவ மத்தியில் ஒரு திடப் பொருள் பதத்தில் செயல்படும்.
தியான நிலை
இந்த நிலை ஏற்படும் போது எண்ணங்கள் முற்றிலும் மறைந்திருக்கும், சுவாசிப்பது கூட தெரியாத நிலையில் இருக்கும், தியானத்தில் இந்த நிலைதான் முக்தி நிலை என்று போற்றப்படுகிறது.
இதன் பின்னர் பிரபஞ்ச சக்தி நம்மோடு தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும். பிரபஞ்ச சக்தி நமது உச்சந்தலையில் உள்ள சஹஸ்ரஹாரா எனும் சக்கிரத்தின் வழியே நம் உடல் வழி பயணிக்க ஆரம்பிக்கும்.
72000 நாடிகள் அல்லது சக்தி குழாய்கள் வழியே பிரபஞ்ச சக்தி பரவுகிறது, இந்த நிலைக்கு சக்தி நிலை என்று பெயர்.
பிரபஞ்ச சக்தியை உள் வாங்கிக்கொள்ளும் இந்த சக்தி குழாய்கள் நமது உச்சந்தலையில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன.
இந்த சக்தி குழாய்கள் நமது உடலெங்கும் பூமியை துளைக்கும் வேர்களென ஊடுருவி இருக்கின்றன. இதன் மூலம் தெய்வீகத்தின் பூக்கள் நம்முள் மலரத் தொடங்குகின்றன.
நாம் சாதாரணமாக உறங்கும்போதும் தியானத்தின் போதும் இந்த சக்திக் குழாய்கள் பிரபஞ்ச சக்தியை சேகரிக்கின்றன, இதன்மூலமே நம் அன்றாட சக்தி செலவழிக்கும் செயல்கள் நடந்தேறுகிறது.
நம்முள் உருவாகும் எண்ணங்களின் அளவுவைத்துதான் பிரபஞ்ச சக்தியை நம் உடல் அனுமதிக்கிறது. எண்ணங்கள் அதிகமாக இருந்தால் பிரபஞ்ச சக்தியை நம்மால் குறைவாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.
பிரபஞ்ச சக்தியின் அளவு குறைய குறைய நமது சக்தி நிலைகள் பழுதுபடுகின்றன. இதனால் வெற்றிடம் ஏற்படுகின்றது. இதுவே சிலகாலம் கழித்து நோயாக மாறுகிறது.
ஆக நம் உடலில் ஏற்படும் நோய்களுக்குமுதல் காரணம் நம் உடலில் தேவையான அளவு பிரபஞ்ச சக்தி இல்லாததுதான்.
தியானத்தின் மூலம் அபிரிமிதமான பிரபஞ்சசக்தி நம் உடலுக்குள் நுழைந்து அதன் வெற்றிடங்களை சுத்தப்படுத்துகிறது. இதன் மூலம் நோய்கள் குணப்படுகின்றன.
நாம் பிரபஞ்ச சக்திகளை உள்வாங்கத் தொடங்கும்போது நம் தலைப்பகுதியில் ஒரு அழுத்தத்தை உணரமுடியும். அல்லது நம் உடல் முழுதும் பாரமாகி விடுவது போன்ற நிலை ஏற்படும்.
இடைவிடாத பிரபஞ்ச சக்தியின் பாய்ச்சலால் நம் வெற்றிடங்கள் சுத்தப்படுத்தப்படுகிற போது அங்கு ஒருவித வலியோஅல்லது அரிப்போ ஏற்படுகிறது.
சில சமயங்களில் நம் உடலின் பல பகுதிகளில் நமக்கு வலிஏற்படும். தீவிரமான தியானங்கள் மூலம் இந்த வலிகள் காணாமல் போய்விடும்.
தியானத்தின் மூலம் நாம் பிரபஞ்ச சக்தியை பெற்றுக் கொள்ளப் பெற்றுக்கொள்ள நம் உடல் நோய்களில் இருந்தும் மன வாதைகளில் இருந்தும் விடுபடலாம்.
மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்