திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமசேவகர் பகுதிக்கு உட்பட்ட சிறுப்பிட்டி கிராமத்தில் காணாமல்போன குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறுப்பிட்டி கிராமத்தை சேர்ந்த இராசரட்ணம் பிரபு எனும் 33 வயதுடைய குடும்பஸ்தர் நேற்று அதிகாலை 4 மணியளவில் வேலைக்கு சென்றுள்ளார். எனினும் அவர் காலை 10 மணி வரையில் வீடு திரும்பாமையினால் உறவினர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். இதன்போது அவர் பயணம் செய்த மோட்டர்சைக்கிள் இலுப்பைக்குளம், கன்னியா வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த உறவினர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போது, ஆடுமேய்க்க சென்ற ஒருவரின் தகவலின் அடிப்படையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சடலம் இராசரட்ணம் பிரபுவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.