திருகோணமலை திவிநேகும வங்கியின் சிங்கபுர கிளையின் முகாமையாளரை இடமாற்றம் செய்தமையைக் கண்டித்து அப்பகுதி மக்களால் இன்று காலை திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியிலிருந்து பதாதைகளை ஏந்தியவாறு நடைபவனியாக வந்த மக்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்கபுர பகுதியினை அபிவிருத்தி அடையச்செய்வதில் பாரிய பங்கு வகித்த குறித்த முகாமையாளரை எந்த வித முன்னறிவித்தலும் இன்றி திடீரென இடமாற்றம் செய்தமையை தாம் எதிர்ப்பதாக சுட்டிக்காட்டிய மக்கள் அவரை மீளவும் குறித்த பகுதிக்கே பெற்றுத்தருமாறு கோரி இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
50க்கும் அதிகமானோர் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் மாவட்ட அரசாங்க அதிபர் N.A.A.புஸ்பகுமாரவிடம் கையளித்தனர்.
இச் சம்பவத்தை முன்னிட்டு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.