திருகோணமலை மாணவர் படுகொலையை விசேட அதிரடிப்படையினரே மேற்கொண்டனர்: உதாலகம அறிக்கை

226

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலைகளை விசேட அதிரடிப்படையினரே மேற்கொண்டதாக உதாலகம அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாணவர் படுகொலைகளுடன் சீருடை அணிந்த தரப்பிற்கு தொடர்பு இருப்பதாக அண்மையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிசாங்க உதலாகம அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் கொலைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டார்கள் என்பதனை நேரடியாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை என்ற போதிலும், விசேட அதிரடிப்படையினரை சுட்டும் வகையிலேயே  அறிக்கையில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யபட்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் வந்த படையினர் மாணவர்களுடன் பேசியதாகவும் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு சென்றதாகவும் திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றதாகவும், அந்த வழியில் சோதனைச் சாவடிகள் முகாம்கள் காணப்பட்டதாகவும் நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இந்தக் குற்றச் செயலை படைத் தரப்பினரே செய்திருக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் நோக்கில் இந்தக் கொலை செய்யப்பட்டிருந்தால் அது ஒர் பிழையான தீர்மானம் எனவும், குற்றச் செயலுக்காக மன்னிப்பு கோரப்பட வேண்டியது அவசியமானது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏ.சீ.எப். தன்னார்வ தொண்டர்கள் கொலையுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புபட்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
தண்டனை விதிக்கும் பாணியில் 16 தமிழர்களும் ஒரு முஸ்லிமும் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மூதூர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னம் இருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி படையினர் அந்தப் பகுதியில் இருக்கவில்லை எனவும், புலிகளே இருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE