திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி இன்று இரவு பிரித்தானிய நேரம் ஏழு மணியளவில் இலண்டனில் காலமானார். மூளாய்,வட்டுக்கோட்டையில் 1933 ஆம் ஆண்டு பிறந்த மங்கையற்கரசி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தமிழர் அரசியலின் முண்னணிப் பெண்மணிகளில் ஒருவராக கருதப்பட்டவர்.
1954 ஆம் ஆண்டு அன்றைய தமிழரசுக் கட்சியின் இளைஞர் அமைப்பின் பொறுப்பாளராக செயற்பட்ட அமிர்தலிங்கத்தை மணம் முடித்தார்.
1977 வரையிலான ஆயுதமற்ற அரசியல் போரின் முக்கிய செயற்பாட்டாளராக செயற்பட்ட பெண்மணியாக இவர் கருதப்படுகிறார். சிங்கள சிறீ போராட்டத்திலும் காலிமுகத் திடலில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போரிலும் பங்க்கேற்ற பெண்களில் முன்னிலை வகித்த ஒருவராக இவரைச் சொல்லமுடியும்.
1977 இல் முதலாவது தமிழ் எதிர்க் கட்சித் தலைவராக பதவியேற்றஅப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள், இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில், 1989 இல் கொல்லப்பட்டதை அடுத்து இவர் இலண்டனுக்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.