இந்த சோதனையில் பல லட்சம் மதிப்பிலான வைப்பு பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கருகலைப்பு மையம்
திருவண்ணாமலை அவுல்காரத் தெருவில் உள்ள வீட்டில் கருக்கலைப்பு மையம் இயங்கி வருவதாகவும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதாகவும் சென்னை மருத்துவ ஊரக நலப்பணிகள் துறைக்கு புகார்கள் வந்தன.
அதன்பேரில் ஊரக மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் குருநாதன், உதவி கமிஷனர் நரசிம்மன், கண்காணிப்பாளர் கமலகண்ணன் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவினர் திருவண்ணாமலைக்கு நேற்று வந்தனர். பின்னர் திருவண்ணாமலை மருத்துவ இணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில், சிறப்பு மருத்துவ குழுவினர் மற்றும் திருவண்ணாமலை போலீசார் அவுல்காரத் தெருவிற்கு சென்று அப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு அடுக்குமாடி வீட்டின் மேல்மாடியில் 10 பெண்கள் இருந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சிறப்பு மருத்துவ குழுவினர் அவர்களிடம் விசாரித்தபோது 5 பெண்கள் கருக்கலைக்க வந்திருப்பதும், அவர்களுடன் இருந்த 5 பேர் அவர்களது உடன் வந்தவர்கள் என்பதும், கருகலைக்க வந்தவர்களில் 3 பேருக்கு வலி ஏற்படுவதற்கான ஊசி, மாத்திரை கொடுத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
வீட்டில் சோதனை
விசாரணையில் அவரது பெயர் திலகவதி என்கிற ஆனந்தி (வயது 46) என்பதும், அவருடைய கணவர் தமிழ்செல்வன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சிறப்பு மருத்துவ குழுவினர் அந்த வீட்டில் சோதனை நடத்தியதில், வீட்டின் பல இடங்களில் கருக்கலைப்பு செய்யக்கூடிய மருந்து, மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வீட்டில் உள்ள ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையை திறக்கும்படி திலகவதியிடம் அதிகாரிகள் கூறினார்கள். அந்த அறை தனது கணவரின் அறை என்றும், அறையின் சாவி தன்னிடம் இல்லை என்றும் கூறினார்.
இதனிடையே கருக்கலைப்புக்காக ஊசி மற்றும் மாத்திரை கொடுக்கப்பட்ட பெண்கள் 3 பேரும் வலியால் துடித்தனர். இதுகுறித்து அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மகப்பேறு சிறப்பு மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஊசி, மாத்திரை கொடுக்கப்பட்ட பெண்களை பரிசோதனை செய்தனர். பின்னர் 5 பேருக்கும் சிகிச்சை அளிக்க அவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.
வைப்பு பத்திரங்கள் பறிமுதல்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாசில்தார் பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பல்வேறு அறைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரை, மருந்து மற்றும் ரூ.24 ஆயிரத்து 855 ரொக்கப்பணம் ஆகியவை தாசில்தார் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பூட்டப்பட்டிருந்த அறைக்கதவை திறக்க சாவி தயார் செய்யும் நபர் அங்கு வரவழைக்கப்பட்டார். அதிகாரிகள் முன்னிலையில் சாவி தயார் செய்யப்பட்டு கதவு திறக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியும் கருவி இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அந்த அறையில் மருத்துவ குழுவினர், போலீசார் சோதனை செய்தனர். அங்கு ஏராளமான மருந்து, மாத்திரைகள் மற்றும் பல லட்சம் மதிப்பிலான வைப்பு தொகை பத்திரங்கள், பல்வேறு வங்கி கணக்கு புத்தகங்கள் இருப்பதும், அதில் ஏராளமான பணம் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து திலகவதியிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மருத்துவ குழுவினர் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியும் கருவி, பலலட்சம் மதிப்பிலான வைப்பு தொகை பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நடவடிக்கை
இதுகுறித்து திருவண்ணமலை மருத்துவ இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறுகையில், ‘திலகவதி இதுபோன்று ஏற்கனவே சிகிச்சை அளித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த பின்னரும் வீட்டில் முறைகேடாக கருக்கலைப்பு செய்து வந்துள்ளார். வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வைப்பு தொகை பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் போலீசார் மூலமாக கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். முறைகேடாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த திலகவதியை போலீசாரிடம் ஒப்படைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.