திரைப் படங்களில் புகை எச்சரிக்கை வாசகத்தை ரத்து செய்யக்கூடாது

268

திரைப்படங்களில் புகை எச்சரிக்கை வாசகங்கள் காட்டுவதை ரத்து செய்ய வேண்டும் என இயக்குநர் ஷியாம் பெனகல் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளின் போது, புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகங்களை காட்டும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஷியாம் பெனகல் தலைமையிலான குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இளைய தலைமுறையினரின் வாழ்க்கை முறையில் தீமையை ஏற்படுத்தும் இந்தப் பரிந்துரையை அரசு ஏற்கக்கூடாது.

உண்மையில், திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகங்களை காட்டும் முறையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது பற்றி பெனகல் குழுவிடம் மத்திய அரசு எந்த பரிந்துரையும் கேட்கவில்லை.

திரைப்படங்களுக்கான சட்டத்தில் மாற்றம் செய்வதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்காகத் தான் இக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், அமைக்கப்பட்டதன் நோக்கத்துக்கு சற்றும் பொருத்தமில்லாமல், திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்க பரிந்துரைத்திருக்கிறது. இது போகாத ஊருக்கு வழி காட்டும் செயலாகும்.

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்ட போது அதை கடுமையாக எதிர்த்தவர் ஷியாம் பெனகல். அப்படிப்பட்டவர் தலைமையிலான குழு இந்த விஷயத்தில் முடிவெடுப்பது எப்படி சரியாக இருக்கும்?

பெனகல் குழுவின் உறுப்பினர்களில் நடிகர் கமல்ஹாசனும் இடம்பெற்றுள்ளார். திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் கூடாது என்ற எனது முயற்சிக்கு துணை நின்ற சிலரில் கமல்ஹாசன் முக்கியமானவர். அவரையும் மீறி இப்படி ஒரு பரிந்துரை அளிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் பின்னணியில் வட இந்திய திரைத் துறையை இயக்கும் சக்திகளும், புகையிலை லாபியும் உள்ளன என்பதை உணரலாம்.

எனவே, திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் தொடர்பான ஷியாம் பெனகல் குழுவின் பரிந்துரைகளை நிராகரித்து இப்போதைய நிலையே தொடர்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.anbumani

SHARE