தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்த பெண்ணும் பலி

239

விழுப்புரம் மாவட்டத்தில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட இளைஞர், தான் காதலித்த பெண்ணைக் கட்டிப்பிடித்ததால் அவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

ஜூலை மாதம் 30ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி. பாளையம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியான நவீனாவின் வீட்டிற்குள் புகுந்த செந்தில் என்ற இளைஞர் பெட்ரோலை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு, அந்தப் பெண்ணையும் கட்டிப்பிடித்தார்.

இதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செந்தில் அன்றே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நவீனா புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் காரணமாக வி. பாளையத்தில் பதற்றம் நிலவுவதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் நவீனாவை நீண்ட காலமாக காதலித்துவந்ததாக கூறிவந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் விழுப்புரம் மாம்பழப்பட்டு ரயில்வே பாதையில் கை – கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.

அதற்குப் பிறகு, நவீனாவின் பெற்றோரின் தூண்டுதலின் பேரிலேயே தான் தாக்கப்பட்டு கை-கால்கள் வெட்டப்பட்டதாக செந்தில் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். ஆனால், அவர் ரயிலில் அடிப்பட்டதிலேயே கைகால்கள் துண்டிக்கப்பட்டதாகத் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்குப் பிறகு நவீனாவும் அவரது குடும்பத்தினரும் கொடுத்த புகாரின் பேரில் செந்தில் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். அதற்குப் பிறகும் நவீனாவை அவர் தொந்தரவு செய்து வந்ததாக அவரது உறவினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையே, தஞ்சாவூர் அருகில் உள்ள சாலியமங்கலம் கிராமத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில்,கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டுமென தலித் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்த 20 வயதுப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து தலித் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகவும் தலித் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியிருக்கிறது.150203104150_love__2957712h

SHARE