தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளியாக அனுஷ்டிக்கும் நிகழ்வு த.ம.தே.கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில் காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இதில் வடமாகாணசபையின் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தியதை காணொளியில் காணலாம்.
தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளியாக அனுஷ்டிக்கும் நிகழ்வு த.ம.தே.கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோ…
Posted by Thinappuyalnews on Tuesday, November 10, 2015
தமிழ் மக்கள் சார்பாக பலமான சக்தி இல்லாமையினாலேயே அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் சாட்டுப் போக்குகளைச் சொல்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் நடைபெற்ற கறுப்புத் தீபாவளி நிகழ்வின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது அரசியல் கைதிகள் இருட்டிலே பல வருடங்களாக வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த தீபாவளியை சந்தோசமாக கொண்டாட முடியாத நிலமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது. எனவே இந்த தீபாவளியை கறுப்பு தீபாவளியாக கொண்டாட தீர்மானித்திருக்கின்றோம்.
இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இந்த நல்லாட்சி அரசு கைதிகளை விடுதலை செய்யும் என நம்பியிருந்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. எமது எதிர்கால அரசியல் தீர்விலும் இதேபோல் ஒரு நிகழ்வைத் தான் இவர்கள் செய்யப்போகிறார்கள் என்கின்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
ஒஸ்லோவில் விடுதலைப் புலிகளுடன் சமமாக பேச்சுவார்த்தை நடத்திய இந்த அரசு அன்று விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டிருந்தது. அதன் பின் விடுதலைப் புலிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு ஈடுபட்டிருந்தது.
விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்த இராணுவ வீரர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு அன்று மாற்றீடாக கைதிகளை விடுதலை செய்திருந்தார்கள். அன்று நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து கொண்டிருந்த கைதிகள் கூட அரசியல் கைதிகளாக கருதி விடுதலை செய்திருந்தார்கள்.
ஆனால் இன்று அரசியல் கைதிகள் தொடர்பில் இந்த நல்லாட்சி அரசு கூறும் சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஏனெனில் அன்றும் இதே அரசியல் யாப்பு சட்டம் தான் இந்த நாட்டிலே இருந்தது. இன்றும் அதே அரசியல் யாப்பு சட்டம் தான் இந்த நாட்டிலே இருக்கிறது.
இன்று தமிழ் மக்கள் சார்பாக ஒரு பலமான சக்தி எம்மிடம் இல்லாது போனதால் அவர்கள் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது. குற்றவாளிகளை விடுவிக்க முடியாது. நீதிமன்ற தீர்ப்பில் உள்ளவர்களை விடுவிக்க முடியாது என சாட்டுக்களை கூறி தட்டிக்கழிக்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபை நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் போது இப்படியான கருத்துக்கள் இந்த அரசிடமிருந்து வருவது மகவும் வேதனைக்குரியது. இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு நல்லிணக்கத்தை தெரிவிக்கவேண்டுமென்றால் உடனடியாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராசா, வடமாகாண போக்குவரத்து அமைச்சின் இணைப்பாளர் செ.மயூரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், கவிஞர் மாணிக்கம் ஜெகன் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளியாக அனுஷ்டிக்கும் நிகழ்வு த.ம.தே.கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோ…
Posted by Thinappuyalnews on Tuesday, November 10, 2015