தீர்வு கிடைக்காவிடின் தீக்குளிப்போம்! பான் கீ மூனின் வருகையை எதிர்பார்த்திருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

567

312695_10151592060678079_585405680_n

காணாமல் போனோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் மீள்குடியேற்றப்படாத மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் வரலாறு காணாத அளவிற்கு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது இன்று பிற்பகல் 12 மணியளவில் யாழ் அச்சக வீதியில் இருந்து ஆரம்பமாகி மூன்று கி.மீ பேரணியாக வந்து தற்போது வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னதாக உள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அத்துடன், சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு இந்த பேரணியில் மக்களை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.

கொழுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் காணாமல் போன உறவுகளின் படங்களையும், பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு இவர்கள் ஆளுநர் செயலகத்திற்கு முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் தற்போது ஐ.நா செயலாளர் பான் கீ மூனின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவரிடம் இந்த பிரச்சினை தொடர்பில் கூற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஐ.நா பொதுச் செயலாளர் உங்களை சந்திக்க விரும்பினால் மாத்திரமே நீங்கள் அவருடன் தொடர்புக் கொள்ளலாம்” என இங்கு வருகை தந்திருந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்ட மக்களிடம் கூறியுள்ளார்.

“பான் கீ மூனிடம் என்ன கூறுவீர்கள்” என ஊடகவியலாளர்கள் மக்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த மக்கள்,

“காணாமல் போனோர் தொடர்பான தகவல்கள் இந்த வருட இறுதிக்குள் எமக்கு கிடைக்காவிட்டால் தாம் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ள ஆயத்தமாக உள்ளதாகவும் தாம் பான் கீ மூனிடம் கூறுவோம்” என ஆர்ப்பாட்ட மக்கள் மிகவும் ஆக்ரோஷமாக கூறினார்கள்.

எனினும் இது வரையிலும் ஐ.நா செயலாளர் யாழிற்கு வருகைத் தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE