இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா பிரதமரை விமர்சித்துள்ளமை மற்றும் புதிய அரசியலமைப்பின் அரசியல் தீர்வு உள்ளடக்கப்படவுள்ளமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு அமைச்சர் கடுமையாக விமர்சித்துவிட்டார் என்பதற்காக தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் வீழ்ச்சியடையாது.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்லும். இந்த தேசிய அரசாங்கத்தை குழப்புவதற்கு இடையூறுகளும் முட்டுக்கட்டைகளும் வரலாம்.
ஆனால் அந்த சவால்களை முறியடித்து நாங்கள் தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வோம். இந்த தேசிய அரசாங்கத்தை ஐந்து வருடங்களுக்கு யாராலும் அசைக்க முடியாது.
இது இவ்வாறிருக்க புதிய அரசியலமைப்பினூடாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசியல் தீர்வுத்திட்டமொன்றை முன்னெடுக்க அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
ஆனால் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் நடத்தும். ஏனைய கட்சிகளுடனும் நாம் இந்த விடயம் தொடர்பில் பேச்சு நடத்தினாலும் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளே மிகவும் முக்கியமானவைகயாகும். காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் பிரதானமான கட்சியாகும்.
எனவே இந்த தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவது மிகவும் அவசியமாகும். விரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் இரு தரப்பு பேச்சுக்களை நடத்துவோம் என்றார்.